சென்னை: தங்கம் விலை இன்று காலையில் பவுனுக்கு ரூ.88 உயர்ந்தது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ச்சியாக பவுனுக்கு ரூ.560 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 20ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பவுன் ரூ.44,400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 21ம் தேதி தங்கம் விலை திடீரென குறைந்தது.
அன்றைய தினம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.44,240க்கு விற்கப்பட்டது. நேற்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,510க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.44,080க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை பவுன் ரூ.320 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,521க்கும், பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு பவுன் ரூ.44,168க்கும் விற்கப்பட்டது.