சென்னை: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கடந்த அக்டோபர் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ஒரு சவரன் ரூ.56,680க்கு விற்கப்பட்டது.
அதே நேரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தங்கம் விலை 4 நாளுக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று உயர்ந்தது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,945க்கும்; பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.55,560க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் சற்று குறைந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,935க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.99க்கு விற்பனை செய்யப்பட்டது.