சென்னை: தங்கம் விலை நேற்று ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.63,840க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக ஜெட் வேகத்தில் அதிகரித்து தினம் தினம் புதிய உச்சத்தை கண்டு வருகிறது. இந்த ஜெட் வேகம் விலை அதிகரிப்பு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.
8 நாட்களாக தொடர் உச்சத்தை கண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (12ம் தேதி) யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை குறைந்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.7,940க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.63 ஆயிரத்து 520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இந்த விலை குறைவு என்பது ஒருநாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,980க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.63,840க்கும் விற்பனையானது. வெள்ளி விலை தொடர்ந்து 9வது நாளாக எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.107க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.