சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்தது. தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,470க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,760க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.
இந்த அதிர்ச்சியை நகை வாங்குவோர் தாங்குவதற்குள், நேற்று தங்கம் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.52,520க்கு விற்பனையானது. ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 5 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 உயர்ந்துள்ளது.