சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.74,560 என்ற வரலாற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. கடந்த 11ம் தேதி முதல் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295க்கும், பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,360க்கும் விற்பனையானது.
இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தை பதிவு ெசய்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 அதிகப்பட்ச விலையாக இருந்தது. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் உயர்வை சந்தித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி மீண்டும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. தங்கம் விலை அடுத்தடுத்து புதிய உச்சத்தை கண்டு வருவது நகைவாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000க்கும் விற்பனையானது.
தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரேல் ஈரான் மீது நேற்று முன்தினம் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் உருவாகி தாக்குதல் நடந்து வருகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு என்பது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.