சென்னை: தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1400 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கடந்த 7ம் தேதி அன்று அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,840க்கு விற்பனையானது. தொடர் விலையேற்றத்தை சந்தித்து வந்த நகை வாங்குவோருக்கு இந்த விலை குறைவு ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளிலேயே தங்கம் விலை குறைந்திருந்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.8,955 ஆகவும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,640க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று அதிகரித்து இருந்தது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.118க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,18,000க்கும் விற்பனையானது.