சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை பதிவு செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக தீபாவளி அன்று(அக்டோபர் 31ம் தேதி) ஒரு சவரன் ரூ.59,640 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைந்து வந்தது. இதற்கிடையில் தங்கம் விலை கடந்த 7ம் தேதி மள, மளவென சவரனுக்கு ரூ.1320 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,600க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,285க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.7,275க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.58,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.