ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான பத்மாசனி தாயார் உடனுறை ஆதிஜெகநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் நகை பெட்டகம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள கருவூல பெட்டகத்தில் வழக்கமான ஆபரணங்கள் ஆய்வின்போது தாயார் மற்றும் மூலவருக்கு அணிவிக்க இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் புகாரின் பேரில் கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். முன்னாள் திவான் மகேந்திரன் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 10க்கும் மேற்பட்ட பெரிய கோயில்கள் உள்ளிட்ட 45 கோயில் நகைகள் பற்றி ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள கருவூலம் மற்றும் கோயில் கருவூலங்களில் ராமநாதபுரம் சமஸ்தான சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், அறங்காவலர் அபர்ணா நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் கடந்த 5 நாட்களாக ஆய்வு செய்தனர்.
ஆவணங்களின்படி தங்க நகைகள் சரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய வெள்ளி நகைகள், முத்து, பவளம் உள்ளிட்ட இதர ஆபரணங்கள், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி மற்றும் பரளச்சியில் உள்ள சிவன் கோயில்கள் உள்ளிட்ட இதர கோயில்களில் தொடர்ந்து நகை சரிபார்ப்பு செய்யப்படும் என சமஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.