சென்னை: ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது நகை வாங்குவோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அன்றைய தினமே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்தது. இதனால் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சுவி்ட்டனர்.
இந்நிலையில், தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, அடுத்த நாளே ரூ.160 குறைந்தது. இப்படியாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த 12ம் தேதி ரூ.51,760க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் விலை கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.1,920 வரை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என, நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ரூ.53,280க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.