சென்னை: தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. தொடர்ந்து அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் தங்கம் விலை எப்படி ஏறியதோ அதே வேகத்தில் குறைந்ததை காண முடிந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. கடந்த 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹50640க்கு விற்கப்பட்டது. 8ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹50800க்கு விற்பனையானது. 9ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ஒரு சவரன் ₹51,400க்கு விற்பனையானது.
தொடர்ந்து 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹51,560க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 11ம் தேதி(நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல், முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் உயர்ந்திருந்தது. அதாவது, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ₹25 உயர்ந்து ஒரு கிராம் ₹6,470க்கும், சவரனுக்கு ₹200 உயர்ந்து ஒரு சவரன் ₹51,760க்கும் விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,120 உயர்ந்துள்ளது. ஆடி மாதத்தில் பெரும்பாலும் திருமணங்கள் நடப்பதில்லை. ஆடி மாதம் வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து ஆவணி மாதம் பிறக்க உள்ளது. ஆவணி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிகளவில் நடைபெறும். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வருவது விசேஷங்களுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு கூடுதல் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.