சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக குறைந்து வருவதால் நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ₹3280 குறைந்துள்ளதால் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ₹55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி, கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ₹60 ஆயிரத்தை தொட்டுவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், கடந்த மாதம் 31ம்தேதி ஒரு சவரன் ₹59,640 வரை சென்றது.
நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ₹135-ம், சவரனுக்கு ₹1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ₹7,085-க்கும், ஒரு சவரன் ₹56,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ₹1,080 குறைந்து ₹56,680-க்கு விற்பனை செய்யப்பட்டதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹3280 குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் நேற்று காலையும் மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது, கிராமுக்கு ₹40 குறைந்து ஒரு கிராம் ₹7,045-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ஒரு சவரன் ₹56,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் திருமண சீசனில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.