புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “ இந்தியாவில் பெண்களிடமிருந்து தங்க தாலிகளை திருடிய ஒரே அரசாங்கம் என்ற பெயரை மோடி அரசு பெற்றுள்ளது.
உயிரியல் பிறப்பல்லாத பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் தங்க கடன்கள் வேகமாக அதிகரித்து வருவது பற்றிய பிரச்னையை நாங்கள் எழுப்பினோம். இந்திய குடும்பங்களால் ரூ.3 லட்சம் கோடி தங்க கடன்கள் வாங்கப்பட்டு, அவை இன்னும் நிலுவையில் உள்ளன. அதிகரிக்கும் தங்க கடன் மற்றும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றால் குடும்பங்கள் இந்த தங்க கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
2024 ஜூன் முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் தங்க கடன்களின் என்பிஏ விகிதம் 30 சதவீதம் ரூ.5,149 கோடியில் இருந்து ரூ.6,696 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இவை முறையான தங்க கடன்கள் மட்டும்தானா? எத்தனை குடும்பங்கள் இந்த தங்க கடன்களை வாங்கி உள்ளன என்ற மதிப்பீடு இல்லை. குடும்பங்கள் இந்த தங்க கடனை திருப்பி செலுத்த தவறும்போது பெரும்பாலும் அடிப்படை தங்க சொத்தை இழக்கிறார்கள். நாட்டில் தங்க கடன்களை திருப்பி செலுத்தாதன் காரணமாக பெண்களின் தங்க தாலிகளை திருடுவதற்கு அரசே பொறுப்பு” என குற்றம்சாட்டி உள்ளார்.