சென்னை: தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு மேலும் சில சிரமங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்
- தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும்.
- அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்.
- தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.
- வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி.
- ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி.
- அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும்.
- கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.
- அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் கருத்து
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்க நகைகளை அடகு வைக்க முடியாத சூழலில் லோன் ஆப்களை நம்பி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நகைக்கடை உரிமையாளர்கள்
தங்க நகைகள் தூய்மைச் சான்றிதழுடன்தான் விற்பனை செய்யப்படுகிறது. அடகு வைக்கும்போதும் தூய்மைச் சான்றிதழ் அவசியம் என்பது தேவையற்றது. புதிய கட்டுப்பாடுகளால் நகை விற்பனை பெருமளவில் குறைய வாய்ப்பில்லை என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.