சென்னை: யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ312 குறைந்தது. ஆடி மாதத்தில் திருமணங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. இதனால், ஆடி மாதத்தில் நகை விற்பனை என்பதும் குறைந்து காணப்படும். அதே நேரத்தில் விலையும் வழக்கத்தை விட குறையும். ஆனால், இந்தாண்டு ஆடி மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை அதிகரித்து வந்தது. அதன் பிறகு உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ44 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது.
அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ39 குறைந்து ஒரு கிராம் ரூ5,456க்கும், சவரனுக்கு ரூ312 குறைந்து ஒரு சவரன் ரூ43,648க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ352 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆடி மாதம் நேற்றுடன் முடிந்தது. இன்று ஆவணி மாதம் பிறக்க உள்ளது. ஆவணி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ளது அது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.