கிறிஸ்துவம் காட்டும் பாதை
(எபேசியர் 4:7-16)
தூய பவுல் அடிகள் ஒரு யூதர், பரிசேயர், யூத சமயத்தில் தீவிரப் பற்று கொண்டு இயங்கி வந்தவர். ஆனால் அவர் யூத சமயத்தில் சமயம் மற்றும் வழிபாடு சார்ந்து எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அதே சமயம் அவர் யூத சமயச் சட்டங்களை அக்காலத்து சட்ட வல்லுநரான கமாலியேல் என்பவரிடம் பயின்றவர். எனவே சட்டப் புலமை பெற்று திறம்பட வாதிடும் அறிவுடையோராயிருந்தார். பல சமயங்களில் தனது வாதத் திறமையினால் பல்வேறு இக்கட்டுகளிலிருந்து அவர் தப்பித்துள்ளார்.
இவ்வாறு பவுல் அடிகள் சமயப் பதவிகள் ஏதுமற்ற சாதாரணராக இருந்ததாலும் இயேசுவின் சிலுவைப் பாடுகள் மற்றும் அவரது தாழ்மையினால் ஈர்க்கப்பட்டு இருந்ததாலும் அவர் கிறிஸ்தவத்தில் பாகுபாடற்ற சமத்துவம் நிலவ வேண்டும் என விரும்பினார். எனவே தான் அவர், ‘‘இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்’’ (கலாத்தியர் 3:28) என்று கூறினார்.
இதேப் புரிதல் தான் திருப்பணி பற்றிய அவரது சிந்தனையில் வெளிப்பட்டது. திருப்பணி என்பது ஏதோ சீடர்களுக்கும் மற்றும் கற்றறிந்தவர்களுக்கும் உரியது எனும் புரிதலை மாற்றி அமைத்தார். மேலும் இப்படிப்பட்டவர்களின் பணி என்பது திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் கிறிஸ்துவின் உடலை (திருச்சபையை) கட்டி எழுப்பவும் வேண்டியது என தெளிவுபடுத்தினார். இவ்வாறு இறைமக்கள் எனப்பட்ட சாதாரண மக்கள், தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் மற்றும் பெண்களை இறைப்பணிக்குத் தகுதியாக்கினார். பவுல் அடிகளின் காலத்தில் திருப்பணியில் அநேகப் பெண்கள் முக்கியப் பங்கு வகித்தது இதன்
காரணமாகத் தான்.
இவ்வாறு தகுதியாக்கப்பட்டவர்கள் மேலும் செய்ய வேண்டியவை எவை என்பதையும் அவர் கூறினார். அவையாவன,
1). இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைதல் வேண்டும்.
2). தவறான கிறிஸ்தவப் போதனைகளைத் தருபவர்களின் தந்திரப் போக்குக்கும், சூழ்ச்சிகளுக்கும் பலியாகி விடக்கூடாது.
3). அன்பின் அடிப்படையில் உண்மை பேசி தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் வளர வேண்டும்.
4). அவரவர்க்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியைச் செய்ய வேண்டும்.
இவை எவ்வாறு நிகழும். கீழ்க்கண்டவை அதற்கு மிகவும் அவசியம்.
1). கடவுளுக்கு அஞ்சி கடவுள் கட்டளையிட்ட நியமங்கள் கட்டளைகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
2). கடவுளுக்கு செவிகொடுக்க வேண்டும்.
3). கடவுள் ஒருவரே என நம்பி அவரை முழு இருதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும் அவரிடம் அன்பு கூற வேண்டும்.
4). கடவுளின் கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்தி வைக்க வேண்டும்.
5). கடவுளின் கட்டளைகளை உன் பிள்ளைகள், உன் பிளைகளின் பிள்ளைகளிடத்தில் பதியுமாறு செய்தல் வேண்டும்.
6). உன் வீட்டில் இருக்கும் போதும், உன் வழிப் பயணத்தின் போதும், எழும்போதும் அவற்றைப் பேச வேண்டும்.
7). உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுத வேண்டும்.
பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).