மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. பட்டாபிஷேகம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்தாண்டுக்கான ஆவணி மூலத் திருவிழா நேற்று காலை 10.15 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆக.16ம் தேதி வரை நடக்கும் இந்த திருவிழாவில், தினமும் சுவாமியின் திருவிளையாடல் நடைபெறும். கொடியேற்றத்தையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்ச்சி செப்.11ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் நடக்கிறது.
13ம் தேதி நடைபெறும் பிட்டுத் திருவிழாவில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று, ஆயிரங்கால் மண்டபத்தை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் பார்வையிட அனுமதிக்கப்படுவர். இரவு 9.30 மணிக்கு மேல் நடைதிறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். செப்.15ம் தேதி சட்டத்தேர் வீதி உலா, இரவு சப்த வர்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
16ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர் டாக்டர் சீனிவாசன் மற்றும் கோயில் இணைக் கமிஷனர் கிருஷ்ணன், கண்காணிப்பாளர் வெண்மணி, பேஷ்கார் காளிமுத்து உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.