Monday, June 23, 2025
Home ஆன்மிகம் கேட்ட வரம் தரும் கரிய காளி அம்மன்

கேட்ட வரம் தரும் கரிய காளி அம்மன்

by Lavanya

பார்வதி தேவியின் அம்சமாகத் தோன்றியவள் காளி. இவள் பற்பல ஊர்களில் “கரிய காளி” என்ற பெயரில் மக்களுக்குப் பிணிகள் தீர்த்து, கேட்ட வரத்தைக் கொடுத்து, நினைத்த காரியங்களைக் கைகூட செய்பவள் கரிய காளி. மக்களின் துயரத்தைத் துடைத்து, அவள் செய்த அளப்பரிய செயல்கள் ஏராளமாகும்.

திருப்பூர் கரிய காளி

வரலாற்று மிக்க நொய்யல் ஆற்றங்கரையின் ஓரம் அமைந்த எழிலார்ந்த நகரம் அமுக்கியம். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இயற்கை வளம் கொழிக்கும் மலைகள், மரங்கள், செடி கொடிகள் மற்றும் அருவிகள், ஓடைகள் இங்கே ஏராளம் உண்டு. திருப்பூர், முதலிப்பாளையம் அருகில் மாணிக்கபுரம் என்ற கிராமத்தில் கரிய காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், சும்மா 1200 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்தது.

சோழ மன்னன்

முற்காலச் சோழ மன்னன் ஒருவர், சிவாலயங்கள் அமைக்க இடத்தைத் தேர்வுசெய்து, கட்டடப் பணியைத் தொடங்கினார். பணிகள் தொய்வில்லாமல் சிறப்பாக நடைபெறுகிறதா? எனக் கண்காணிக்க தன் பரிவாரங்களுடன் சென்று அடிக்கடி பார்ப்பது வழக்கம். ஒருமுறை சோழ மன்னன் தன் பரிவாரங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையின் ஓரமாக அமைந்த அமுக்கியம் என்ற நகரின் வழியாக நடந்து வந்தார். களைப்பு மிகுதியால் வீரர்கள் ஓய்வெடுக்க சிரம பரிகாரம் செய்து கொள்ள விரும்பினர்.

வீரர்களின் மனநிலையை அறிந்த மன்னன், நொய்யல் ஆற்றின் அருகில் கூடாரத்தை அமைத்து தங்கினார். எப்பொழுதும் சிவபூஜை செய்து, அதன் பின்பு உணவு உண்ணுவது மன்னரின் வழக்கம். அவ்வாறு மன்னர் நொய்யல் ஆற்றில் குளித்து, சிவன்பூஜை நிறைவுற்ற பிறகு உணவு உண்டு முடித்தார். அன்று இரவு உறங்கினார்.

கனவில் தோன்றிய அழகிய சிறுமி

மன்னர், உறக்கத்திலும் சிவனை நினைத்து சிவ நாமத்தை உச்சரித்து இருந்தார். அப்பொழுது கரிய நிறமுடைய அழகிய சிறுமி, சிவப்பு வண்ணத்தில் பாவாடை அணிந்து, கைநிறைய வளையல்கள் குலுங்க, கால்களில் கொலுசுகள் சல்… சல்… என்று லேசாக சப்தத்தில் நடந்து, மென்மையாகச் சிரித்தவாறு மன்னரின் அறைக்குள் நுழைந்தாள். மன்னரின் அருகே வந்து நின்றாள். சிறுமியின் கண்களில் தெரிந்த தெய்வீக ஆற்றலைக் கண்டு மெய் மறந்தார் மன்னர். இருகரம் கூப்பி “அம்மா… அம்மா…’’ என்று அழைத்து வணங்கினார்.

உடனே அவர் கண்ட கனவும் கலைந்தது. சிறுமியும் மறைந்தாள். ஆனால், மன்னர் இதயத்தில் மட்டும் கரிய நிறம் உடைய சிறுமியின் அழகிய பிம்பம் மனதில் அப்படியே தங்கிவிட்டது.“ஆஹா! எவ்வளவு அழகானவள். யார் அவள்? எதற்காக என்னிடம் வந்தாள்? அவள் என்னிடம் எதையோ கேட்பதற்காக வாயைத் திறந்தாள். ஆனால் எதையுமே அவள் கேட்க வில்லையே’’ என்று மன்னர் மனதிற்குள் வருத்தப்பட்டார்.

சோழன் கட்டிய முதல் கரிய காளி கோயில்

பொழுது புலர்ந்தது. மன்னர் விழித்தெழுந்தார். நொய்யல் ஆற்றில் நீராடி சிவபூஜை செய்து நிமிர்ந்த பொழுது, எதிரில் கல் வீடு ஒன்று இருப்பதைக் கண்டார். அங்கிருந்து கரிய நிறமுடைய சிறுமி வெளியே வந்தாள். மன்னர் கனவில் கண்ட அதே சிறுமி. மன்னர் உடல் புல்லரிக்க சிவ நாமத்தைச் சொல்லிய படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
அச்சிறுமி அருகில் இருந்த நாகலிங்க மரத்தின் அடியில் அமர்ந்தாள். ஒரு சிறிய கல்லுக்கு சிவநாமம்கூறி அர்ச்சனை செய்தாள். மன்னர், அவள் அருகே செல்ல ஓர் அடி எடுத்து வைத்ததும், அடுத்த கணம் ஓர் அதிசயம் நடைபெற்றது. கரிய நிறம் உள்ள சிறுமி மறைந்தாள். அவள் இருந்த கல் வீடும் மறைந்தது. “இவள் யார்? புரியவில்லையே’’ என்று குழப்பத்
துடன் சிவனை நினைத்து தியானித்தார்.

சிறுமி இட்ட ஆணை

அன்று இரவு அதே சிறுமி கனவில் தோன்றினாள். “மன்னா.. சிவாலயங்கள் கட்டுமானப் பணியைப் பார்வையிட வந்த போது எல்லாம், நீ அறியாமல் பின் தொடர்ந்தேன். இதுவரை உன் அருகே நான் பாதுகாப்பு துணையாக இருந்தேன். ஆனால், இனி என்னால் உன்னுடன் வர இயலாது. ஆகவே கரிய காளியாக இங்கே நான் நிரந்தரமாக தங்கிவிடுகிறேன். மக்கள் நினைத்த காரியங்கள் யாவையும் நல்லபடியாக முடித்துத் தருகிறேன்.

எனக்காக, நீ ஓர் ஆலயம் கட்டித்தர வேண்டும்’’ என்று ஆணையிட்டு மறைந்துவிட்டாள். மன்னர், சிவ ஆலயங்கள் அமைப்பதுடன், முதல் முதலில் பெண் தெய்வமாகிய கரிய காளி அம்மனுக்கு கல் கட்டடத்தில் கோயிலைக் கட்டினார். சிறுமி தென்பட்டு மாயமாக மறைந்த கல் வீடு கோயிலாகவும், அவள் அமர்ந்து பூஜை செய்த நாகலிங்க மரம் அப்படியே தங்கிவிட்டது.

காலவெள்ளத்தால், அழியாமல் இன்றும் கோயில் பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஆனால், நொய்யல் ஆற்றின் மீது இருந்த அமுக்கியம் நகரம் அழிந்துவிட்டது. எவ்வாறு எனில், இயற்கையின் சீற்றத்தால் நோய் பிடித்து மக்கள் உயிர் துறந்தனர்.

இக்கோயிலின் சிறப்பு

கோயில் சுற்றுப் பிரகார சுவர்களில் நேர்த்தியான அழகிய சிற்பங்கள் உள்ளன. கரிய காளி அம்மன் கருவறையின் நிலைப் படியில் கஜலட்சுமி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பெரிய யானைகள் இருபுறமும் உள்ளன. அகலமான கல் நிலவு பூவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. சுற்றுப்பிரகாரத்தில், அழகான மனிதன் வாழ்வின் முதல் விலங்குகள் வாழ்வியல் வரை விளக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இதைக் காணும் பொழுது, டார்வின் கொள்கை நினைவுக்கு வருகின்றது. நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பவள் கரிய காளியம்மன். இவளின் தோற்றம் எங்குமே தோன்றாதவாறு காட்சி அளிக்கிறாள். அம்மன் பீடத்தில் அமர்ந்த கோலம் சற்று வித்தியாசமான அமைப்பில் உள்ளது.

பத்மாசன முறையில் வலது காலை மடித்து வைத்தபடி அமர்ந்திருக்கிறாள். இடது காலில் அரக்கனை வதம் செய்தவாறு அவள் வலது கையில் உள்ள சூலாயுதம் கீழ் நோக்கி அரக்கன் தலையின் மீது வைத்து இருக்கிறாள். தலையில் தீக்குண்டத்துடன் அமர்ந்து உள்ள ஒரே கோயில் இது மட்டு மே ஆகும். வேறு எங்கும் காண இயலாது. உக்கிர காளியாக எழுந்தருளி இருந்தாலும், அன்னையின் முகம் சாந்தமாக காணப்படுகிறது. ஒரு பகுதி சாந்தரூபியாகவும், மறுபகுதி ஆக்ரோஷமான அம்மனாகவும் காட்சி அளிக்கிறாள்.

இரு புறமும் உள்ள துவாரபாலகரின் அனுமதி பெற்றே அன்னையின் தரிசனத்தைத் காணவேண்டும் என்பது ஐதீகம்.கோயிலின் முன் மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்பாக, ஒரு புறம் விநாயகரும் மற்றொருபுறம் முருகரும் நின்று அண்ணனும் தம்பியுமாக கோயிலில் நுழைவு வாயிலிலே காட்சி தருகின்றனர். கோயிலில் எதிரில் பிரம்மாண்டமான தீபஸ்தம்பம் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து கோயிலுக்கு வர படித்துறையும் அமைக்கப்பட்டு உள்ளது.

பேச்சியம்மன்

கோயில் முன்பகுதியில், பேச்சியம்மன் என்ற கிராம தேவதை அழகாக எழுந்தருளி இருக்கின்றாள். மக்கள், வெள்ளையம்மன் என்றும் இவளை அழைக்கின்றனர். இவளின் உருவம் சற்று வித்தியாசமானது. பெண் முக அமைப்பும், பாம்பு போன்ற உடலமைப்பும் இணைந்து ஓர் உருவம் உடையவளாகத் திகழ்கிறாள்.

கன்னிமார்கள்

திருமால் ஆதிசேஷனின் மீது துயில் கொள்கிறார் என்றால், இங்குள்ள கன்னிமார்கள் ஐந்து தலைகள் நாகத்தின் அரவணைப்பில் எழுந்தருளி உள்ளனர். இவர்களுக்குப் பாவாடை சாற்றி எலுமிச்சை மாலை போட்டு வணங்கினால், பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றனர்.

கருப்பண்ண சாமி

ஊர் காவல் தெய்வமான கருப்புசாமிக்கும் தனி சந்நதி உள்ளது. மக்கள் தங்கள் குறை தீர்ந்ததும் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

பிள்ளை தெய்வம்

பிள்ளை தெய்வம் என்பவள், கையில் குழந்தையை ஏந்தி அமர்ந்திருக்கிறாள். பிள்ளை வரம் கேட்டு வரும் பக்தர்களுக்கு குழந்தை செல்வத்தை அருளக் கூடிய வளாகத் திகழ்கிறாள். மேலும் இங்கு, வில்வமரம் – ஆலமரம் என இருமரங்கள், வேண்டிய வரம் தரும் மரங்களாக பிரதான இடத்தை வகிக்கின்றன.

இக்கோயிலின் விஷேசம்

இந்த ஊரில் வாழும் மக்கள், தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண கரிய காளி அம்மனின் அருளை நாடுகின்றனர். திருமணம் செய்ய மணமக்களுக்கு (மணமகன், மணமகள்) வரன் பொருந்துமா? திருமணம் செய்யலாமா? என்ற சங்கடமான கேள்விக்கும், தொழில் செய்யலாமா? வேண்டாமா? என்பதற்கும், அவரவர் பிரச்னைகளுக்கு முடிவெடுக்க தெரியாத போது, மக்கள் கரிய காளியம்மன் கோயிலில் பூ போட்டு உத்தரவு கேட்பது, இந்த ஊரில் உள்ள மக்களின் ஐதீகம். இவளின் உத்தரவு கிடைத்துவிட்டால், அதன்படியே அவர்கள் நடக்கிறார்கள். இவளின் அருள் ஆசி உண்டு என்று மக்கள் நம்புகின்றனர்.

திருவிழாக்கள்

ஆடி வெள்ளிக் கிழமைகள், அமாவாசை அன்று மக்கள் கூட்டமாகக் கூடி வழிபாடு செய்கிறார்கள். பொதுவாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அன்று மக்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வணங்குவர். இவள், சில மக்களின் குலதெய்வமாகத் திகழ்கிறாள்.

வழித்தடம்

திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடர் வண்டி நிலையத்தில் இருந்தும் 10 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது. கரிய காளி அம்மனின் அருளைப் பெற நினைப்பவர்கள், அங்கு சென்று உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண பூ போட்டு கேட்டு அறியலாம். அவள் நிச்சயம் அருள் பாலிப்பாள்.

பொன்முகரியன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi