*ப்ராணாயாமத்தின் மூலமாக மூச்சு அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் மூச்சு அடங்கும். ஆகையால் இயங்கிக் கொண்டே இருக்கும் மனதை நிறுத்தச் செய்யும் முயற்சி. இதை ஸ்ரீ யத்னம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். ப்ராணாயாமப் பயிற்சியே மனதை அடக்குவதற்கு உண்டான முதல் பயிற்சியாகும்.
*ஆசனம் – உடல் அசைவற இருந்தால் அல்லது இருக்க முயற்சி செய்தால் மூச்சு அசைவை தவிர மற்ற அசைவுகளை நிறுத்தினால் மனம் அடங்கும். இதை ஆசனம் என்கிறார்கள். இதுவும் மன அடக்கத்திற்கான பயிற்சியே ஆகும்.
*ஜபம் – ஒரே மந்திரத்தை தொடர்ந்து இடைவிடாமல் ஜபித்தால் மனம் அடங்கும். இதை ஜப யக்ஞம் என்பர்.
*பூஜை – இறைத் திரு உருவை நம்முடையது என்று கருதி பூசித்தால் மனம் அடங்கும். இதை பாவ யக்ஞம் என்பர்.
*சமாதி – நம் உடலையே இறைவன் இருக்கும் கோயிலாக எண்ணி கோயிலுக்கான நெறிமுறைகளையே பின்பற்றி இறைவன் வாழிடமாக கருதி தியானிப்பர்.
பயன்
*ப்ராணாயாமத்தினால் உடல் எடை குறையும், உடல் பாரமாக இருக்காது, சுறுசுறுப்பாக இயங்கும்.
*ஆசனத்தினால் நோய் எதிர்ப்புச் சக்தியின் தோற்றத்தால் அடிக்கடி நோய் வராது. இளமையாக இருப்பவர்கள், எப்படி இருக்கிறார்களோ அப்படியே அப்பருவம் கடந்த பின்னும் உற்சாகமாக இருப்பர்.
*ஜபம் செய்வதால் எதிர்கால உண்மை நிகழ்வை அறிந்து முன்னதாகவே துன்பத்தை போக்கி கவலையற்று இருப்பர், மகிழ்ச்சியாக இருப்பர்.
*பூஜை செய்வதால் தெளிவுடை யவர்களாகவும், அமைதி உடையவர்களாகவும், பரபரப்பு அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
*சமாதி நிலையை அடைந்தவர்கள் உடல் வேறு, மனம் வேறு, உயிர் வேறு என்பதை அறிந்து உணர்வார்கள் ஆகையால் மரணபயம் அற்றவர்களாக இருப்பார்கள்.
இவை ஐந்தும் தியானத்தின் ஒவ்வொரு படிநிலையிலும், சாதகனுக்கு ஒன்றன்பின் ஒன்றாக கிடைத்துக் கொண்டேயிருக்கும். அந்த ஐந்தையும் தியானம் செய்கிறவர்களுக்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்ற எண்ணிக்கையில் ஆனந்தம் இணைத்து தோன்றும். ஒன்றுக்கும் மேற்பட்ட மகிழ்ச்சியையே ‘‘களி’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.
உதாரணமாய் மெய்யின்பம் மட்டும், மெய்யும், வாயும் இரண்டும். மெய், வாய், கண் மூன்றும். மெய், வாய், கண், மூக்கு என நான்கும். மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐந்தும். மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் என ஆறும் இணைந்து பெரும் இன்பமானது மிக அதிகமாவதையே ‘‘களி’’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். ஒவ்வொரு புலன் குறையும்போது அந்தந்த புலன் வழி கிடைக்கும் ஆனந்தமும் குறையும் என்பதனால் ‘‘களி’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். பிற ஆனந்தங்களை சிறியதாகிவிடும் உமையம்மையின் பேரானந்தத்தையே ‘‘ஆனந்த லவிபூத ப்ரம்மாத்யானந்த சந்தத்யை நம:’’ என்பதனால் அறியலாம். இத்தகைய பேரின்பத்தையே ‘‘களியாகி’’ என்கிறார்.
‘‘அந்தக்கரணங்கள் விம்மி”
மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கையும் சேர்த்தே ‘‘அந்தக்கரணம்’’ என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடு கின்றார். ஒரு உதாரணத்தினால் இதை விளக்கலாம். ஒரு தொலைபேசியில் அழைப்பொலி கேட்கிறது அதை மனம் என்று அறிக. தொலைபேசியில் உள்ள எண்ணை கவனித்த உடன் அது யாரிடத்திலிருந்து வருகிறது என்பதை முடிவு செய்வது புத்தி எடுத்து பேச வேண்டும் இல்லை அதை மறுக்க வேண்டும் என்று முடிவு செய்வது சித்தம்.
எடுத்து பேசினால் அல்லது தொலைபேசியை நிறுத்தி மறுத்தால் அஹங்காரம். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானது. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இதனை மனதில் கொண்டே மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கையும் கவனிக்க வேண்டும். இதையே ‘‘அந்தக்கரணங்கள்’’ என்கிறார்.
‘‘அந்தக்கரணங்கள் விம்மி’’ இது ஒரு உபாசனை கலைச்சொல்லாகும். சொல்லானது மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கையும் குறிக்கும். மனமானது சுகம், துக்க அனுபவத்திற்கு கருவியாகிய இந்திரியம்.அதுவும் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியாய், பலவாய், பரமாணு ரூபமாய், நித்தியமாய் இருக்கின்ற நினைத்தலுக்குரிய கருவி நினைவுகளை புலன்வழி பெறும். புத்தி என்பது மனிதன் நினைவுப் பதிவைக்கொண்டு நிகழ்கால சூழலுக்கேற்ப மனதின் பல்வேறு கருத்துக்களில் ஒன்றை மட்டும் தெளிவு செய்து மெய், வாய், கண், மூக்கு, செவி செயல்பட ஆணையிட்டு சுக துக்கத்தை அனுபவச் சாத்தியப்படுத்தி சித்தம் என்னும் கரணத்திற்கு அனுப்பும்.
சித்தம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றின் வழியாகக் கண்டு, கேட்டு, உற்று, நுகர்ந்து, சுவைத்த அனுபவத்தால் ஏற்படும் மனதின் நினைவுகளாய் நிலைத்து நிற்பதால் கிடைத்த பட்டறிவைக்கொண்டு நிகழ்காலத்தில் கண்டு, கேட்டு, உற்று, நுகர்ந்து, ருசித்துக் கொண்டிருக்கும் காட்சி களோடு ஒப்பிட்டு உள் தோன்றும் அறிவு. இதற்கு சித்தம் என்று பெயர்.
அஹங்காரம் என்பது மனம், சித்தம், புத்தி இவற்றின் வழி உறுதி செய்த பண்பை, அறிவை, உணர்வை, நினைவை அந்தந்த சூழலுக்கு தகுந்தாற் போல் பல்வேறுபட்ட சுக துக்க அனுபவத்தை பிரித்துக் காட்டுவது, தனித்துக் காட்டுவதன் மூலம் ஓர் அனுபவத்தை ஒரே நேரத்தில் ஆன்மாவிற்கு தரும். ஒரே நேரத்தில் எந்த ஆன்மாவும் இரண்டு அனுபவத்தை பெறாது. வேற்றுமையில் ஒற்றுமை காட்டுவது அஹங்காரம். [உதாரணம்] மலர், மனிதன், விலங்கு, மோதிரம், திருக்கடவூர் என்ற பல்வேறுபட்ட பொருள்களுள் ஒன்றைச் சூட்டுவது அஹங்காரம்.
மேலே குறிப்பிட்ட பொருள்களில் மோதிரம் என்ற ஒன்றை மட்டும் சூட்டினால் அது அஹங்கார தத்துவம். பலவகைப்பட்ட மாமரம், தென்னைமரம், புளியமரம், வில்வமரம் போன்றவற்றில், வில்வமரம் என்ற ஒன்றை மட்டும் குறிப்பிட்டால் அது புத்தி தத்துவம் எனப்படும். ‘‘அந்தக்கரணங்கள் விம்மி’’ என்பதால் மானுடத்தின் அனுபவமானது, புலன் தாங்கிய உடலையும், உடல் தாங்கிய உள்ளத்தையும், உள்ளம் தாங்கிய புத்தியையும், புத்தி தாங்கிய அஹங்காரத்தையும் சார்ந்தே சுக துக்க அனுபவமானது அமையும்.
அந்த வாசனா மலத்தின் வழியாக பெற்ற அனுபவங்களின் வாயிலாக, ஒரு மனிதன் தனக்குள் பெற்ற கருத்து, செயல்பாடு, சுக, துக்க, உணர்வு அதனால் தோன்றும் அனுபவம். அந்த அனுபவத்தையே ‘‘விம்மி’’ என்கிறார். அது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஆனால், உபாசனை விஷயத்தில் பெரும் உள்ளார்ந்த அனுபவமானது கண்டிப்பாக மாறாது என்கிறார் பட்டர். உலகியல் சார்ந்த அனுபவங்கள் மாறுபடுமே அன்றி இறை அனுபவமானது எக்காலத்தும் யாருக்கும் ஒரே மாதிரியாய் அமையும் என்பதையே நமக்கு சூட்டிக் காட்டுகிறார். இந்த மாறாத ஒன்றுபட்ட ஒரேமாதிரியான அகநிலையே சத்ய தரிசனமாகும். அதையே ‘‘அந்தக்கரணங்கள் விம்மி’’ என்கிறார்.
‘‘கரைபுரண்டு வெளியாய்விடின்”
‘‘கரைபுரண்டு’’ என்கிற வார்த்தையால் மனம், புத்தி, சித்தம் இவற்றின் வழி, உமையம்மையின் அருளானது ஒருவரின் மனதிற்குள் சென்றாலோ, புத்திக்குள் சென்றாலோ, அஹங்காரத்திற்குள் சென்றாலோ அந்த கரணமானது உலகியல் இன்பங்களை நாடாது. உமையம்மையின் அருளையே நாடி பின் செல்லும். அந்த பண்பானது தொடர்ந்தால் துறவு நெறி ஏற்படும் அல்லது தேவதையின் வழி அருளினால் சித்துக்கள் தோன்றும். மேலும் உமையம்மையின் நோக்கில் அனைவரும் கருணைக்கு பாத்திரமானவர்கள்.
உமையம்மையின் அருள் கலந்தால் அந்தக் கரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுகுன்ற ஆரம்பிக்கும், ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், ஆனந்தமாகவும், இருந்தாலும் உலகியல் நோக்கில் செயல்படா ஞானநெறியை தோற்றுவிப்பதனால் பார்ப்பதற்கு பித்து போன்று இருப்பர். ஒரு குழந்தையைப் போல் இருப்பர். இந்த நிலையையே ‘’கரைபுரண்டு வெளியாய்விடின்’’ என்கிறார்.
‘‘எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே”
உலகிலுள்ள பொருள்கள் நம் சுற்றத்தினர்கள் இவர்களை விட நம் உடலை விட உமையம்மையின்மீது அன்பு தோன்றும் அந்த அன்பு உமையம்மையினிடத்து எதையும் எதிர்பாராமல் இருக்கும். தனக்கு என்று ஒரு கடமை இல்லாதது போல மனம் நினைக்கும். உமையம்மையை நினைக்கும் தோறும், பேசும்தோறும், காணும்தோறும் எல்லையற்ற மகிழ்ச்சி பொங்கும். அதனால் மனது அதையே விரும்பும் என்ற உண்மை நிலையில் உமையம்மையின் நினைவு மறக்காது.
எல்லாவற்றையும் மறந்த மரணத்திலும் கூட மனமானது உமையம்மையையே பற்றி நிற்கும் இந்த உன்னத நிலையையே அபிராமிபட்டர் ‘‘எங்ஙனே மறப்பேன் நின்விரகினையே’’ என்ற வார்த்தையால் பதிவு செய்கிறார். ‘‘உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது’’ (89) என்று உலக உணர்வுடைய மனதையும், உமையம்மையை உணர்ந்த மனதிற்கும் உள்ள வேறுபாட்டை நமக்கு அறிவிக்க ‘‘எங்ஙனே மறப்பேன் நின்விரகினையே’’ என்கிறார்.
“அந்தமாக” ‘‘அளியார் கமலத்தில் ஆரணங்கே’’
என்பதனால் இதயத் தாமரையில் உமையம்மையை மந்திர வடிவில் நினைத்து தியானம் செய்வதையும், ‘‘அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்’’ என்பதனால் தியானத்தை தொடர்ந்து செய்வதனால் ஏற்படும் உள்ள மாற்றத்தையும்,‘‘களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு வெளியாய் விடின்’’ என்பதனால் உலக மற்றும் உடல் சார்ந்த உணர்வுகள் அற்றுப் போவதையும், ‘‘எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே’’ என்பதனால் இறை உணர்வு மானுட மனதில் வெளிப்பட்டு நிற்பதையும் குறிப்பிடுகிறார். அதையே செய்து அருள்
பெறுவோம்.
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்