முன்பு சிவனை போன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. ஐந்து தலையுடன் இருந்த பிரம்மன், ஒரு சமயம் கயிலாயம் வந்தார். அப்போது தூரத்தில் இருந்து பார்த்த பார்வதிதேவி, சிவன்தான் வருகிறார் எனக்கருதி எழுந்து நின்று மரியாதையுடன் வணங்கி நின்றாள். பிரம்மன் நகைத்தார். அருகில் வந்ததும்தான் தெரிந்தது அது சிவனல்ல, பிரம்மன் என்று. தான் அறியாது செய்ததை ஆணவமாக எடுத்துக் கொண்டு ஏளனமாக பிரம்மன் சிரிக்கிறாரே என்று சினம் கொண்ட சிவசக்தி, சிவனிடம் நடந்ததைக்கூறி முறையிட்டாள்.
ஆத்திரம் கொண்ட ஆதிசிவன் பிரம்மனின் 5வது தலையை வலது கரத்தால் கொய்தார். சிரசு கொய்யப்பட்ட பிரம்மன் அலறினான். அந்நேரம் நான்முகன் நாயகி மீட்டுக்கொண்டிருந்த வீணையின் தந்தி அறுபட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததை உணர்ந்த வாணி, விழிகளை மூடி ஞானத்தால் நோக்க, கயிலையில் நடந்த சம்பவம் அவள் முன் வந்து சென்றது. வேகம் கொண்டு எழுந்தாள் வேதவாணி, கயிலையை அடைந்தாள். அங்கே ஐந்து தலையில் ஒன்று கொய்யப்பட்டு நான்கு தலையுடன் மயங்கி கிடந்த தன் பதியைக் கண்டு கதறினாள் கலைவாணி.
பிரம்மனிடமிருந்து கொய்யப்பட்ட தலை, சிவனின் வலக்கையில் ஒட்டிக்கொள்ள, கைகளில் பிரம்ம கபாலத்துடன் நின்று கொண்டிருந்தார் கயிலை நாதன்.
வேத சொரூபமான என் கணவரின் சிரசைக் கொய்த சிவனே, உம்மை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உண்ண உணவின்றி சுடுகாட்டுச்சாம்பலை மேனியெங்கும் பூசிக்கொண்டு, பிணத்தை உண்டு திரியுங்கள் என்று சாபமிட்டாள். எதிரே தேவி தென்பட, அவளைப் பார்த்து கலைவாணி, ‘‘என் பதி உனைப்பார்த்து நகைத்தார் என்பதற்காக, அவரின் சிரத்தை பலியாக கேட்டதற்காக கோர முகத்தோடு வனத்தில் திரியக்கடவாய். உன் பதியின் சரீரத்தை பாதியாக கொண்டவள் என்பதால், இருவரும் இணையாது வேறு வேறு திக்குகளில் திரிவீர்கள் என்று தேவிக்கு சாபமிட்டாள்.
நாரதர் மூலம் நடந்ததை அறிந்த நாராயணன், தங்கையின் நிலை கண்டு, அவளுக்கு உதவு முன்வந்தார். கானகத்தில் திரிந்த தேவி, பசியோடு இருக்கும் சிவனுக்கு உணவு கொடுக்க விரும்பினாள். சிவனின் வலக்கரத்தில் பிரம்மனின் தலை ஒட்டிக்கொண்டிருப்பதால் அவரால் உண்ண முடியாது என்பதால், பனை ஓலைக்குள் உணவை உருட்டி, சிவனுக்கு ஊட்ட முன்வந்தாள். ஆனால் பிரம்ம கபாலம் அதை உண்டு விட்டு, மீண்டும் சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது.
அதனால் கோபமுற்ற தேவி, அடுத்த கவள உணவினை கீழே போட, அதை பிரம்ம கபாலம் உட்கொள்ளும் நேரத்தில் உமையவள் தனது காலால் கபாலத்தை மிதித்து பூமியோடு சேர்த்து மண்ணோடு மண்ணாக்கினாள். சிவனின் தோஷம் கலைந்தது. உமையவள் சிவனிடம் தன்னையும் கயிலாயம் அழைத்துச் செல்லுமாறு கூற, அவரோ உன் கோர உருவம் மாறியதும் அழைத்து செல்வதாக வாக்களித்தார்.
கோர உருவம் மாற என்ன செய்யவேண்டும் என பார்வதி தேவி அண்ணன் மகாவிஷ்ணுவிடம் வினவ.அவர், ‘‘திருவண்ணாமலை பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, அங்கு ஈசனை நினைத்து தவமிருந்தால், நினைத்தது நிறைவேறும்’’ என்றார். அதன் படி திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள வனத்தில் புற்று வடிவத்தில் தவமிருந்தாள். தேவி தவமிருந்த தளம் மலையரசனுக்கு உரிமையான இடம் என்பதால், அங்கு புற்று வளர்ந்திருப்பதை கண்ட அரசன் அதை இடிக்க உத்தரவிட்டான். பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த தாசன் என்பவன், புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்துக் கொண்டான். புற்றை இடித்துவிட்டு அரசரின் பணியாளர்கள் சென்ற பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை மீண்டும் அதே இடத்தில் வைத்து பூஜை செய்தான் தாசன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் புற்றை உடைக்க ஆட்களை அனுப்பினான். அன்னைக்கு காவலாக நின்ற சிவபூதங்கள் பணியாளர்களை கொன்றார்கள். இதுக்கெல்லாம் காரணம் அந்த மீனவன் என்று கோபம் கொண்ட அரசன், மீனவனை கொல்ல ஆணையிட்டான். உத்தரவிட்ட அந்த நொடி, அரசனின் கை உணர்ச்சி இன்றி தளர்ந்தது. இது தெய்வ மகிமை தான் என்று புரிந்து கொண்டான். அப்போது பராசக்தியின் அசரீரி, ‘என்னை பூஜிப்பவர்களை நான் பாதுகாப்பேன்’ என்று ஒலித்தது. தன் தவறை உணர்ந்த அரசன் ஆதிபராசக்தியிடம் மன்னிப்பு கேட்டான். தன் தவறுக்கு பரிகாரமாக அந்த இடத்தை அம்மனுக்கே காணிக்கையாக வழங்கினான்.
இணைதல் என்றால் அங்காளம் என்று பொருள். தவத்தால் பரமனுடன் இணைந்த ஈஸ்வரி என்பதால் அங்காள பரமேஸ்வரி எனப்பெயர் பெற்றாள். அங்கு என்றால் புற்று. காளம் என்றால் பாம்பு. புற்றுக்குள் பாம்பாக நின்றவள் என்பதால் அங்காளம்மன் என்றும் அழைக்கப்பட்டாள். மலையனூரில் மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டி, இன்றுவரை அந்தக் கோயிலில் சேவை செய்கிறார்கள்.
மேல்மலையனூரில் வலப்பக்கத்தில் ஈசன் அமர்ந்திருக்க, தன் பாதத்தில் பிரம்ம கபாலத்தின் தலையை அழுத்தியபடி உக்கிரம் பெருக்கி அங்காளம்மன் அமர்ந்திருக்கிறாள். மயானக் கொள்ளையும், ஆடிவெள்ளியும், மாசித் தேர் திருவிழாவும் இங்கு பிரசித்தம். சுடுகாட்டுச் சாம்பலும், புற்று மண்ணும், குங்குமமும்தான் இங்கு பிரசாதமாய் வழங்குகின்றனர். இத்தலம் திண்டிவனம் – செஞ்சி பிரியும் சாலையிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல்மலையனூரில் அமைந்திருக்கிறது.
மகி