மதுரை: அண்ணாமலை லண்டன் பயணத்தை, ஆடுகள் பாடம் படிக்கும் வீடியோவை வெளியிட்டு செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். சர்வதேச அரசியல் படிப்பிற்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். 3 மாதங்களில் இப்படிப்பை முடித்து, நவம்பர் இறுதியில் இந்தியா திரும்புவார் எனக் கூறப்படுகிறது. லண்டன் சென்றுள்ள அண்ணாமலையை கிண்டலடித்து தனது எக்ஸ் தளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்காரர் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார். நான் பார்த்தேன், நீங்களும் பார்ப்பதற்காக!!!’’ எனக்குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வகுப்பறை டெஸ்க்கில் புத்தகங்களை விரித்து வைத்து வெள்ளை ஆடுகள், கருப்பு ஆடுகள் தனித்தனியாக பார்த்து முழித்துக் கொண்டிருக்கும் காட்சி, ‘ஹஹ்ஹஹ்ஹா…’ என்ற சிரிப்பொலியுடன் இடம்பெற்றிருக்கிறது. இதனால் ஆத்திரத்தில் கொதித்தெழுந்துள்ள பாஜவினர் பலரும், ‘தெர்மகோல் விஞ்ஞானி’ எனத்துவங்கி, ‘கூவத்தூர் கூத்து’ என்பது வரை கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என இருதரப்பும் தொடர்ந்து மாறி, மாறி விமர்சித்து வரும் நிலையில், செல்லூர் ராஜூவின் இந்த பதிவு மேலும் மோதலை அதிகரித்துள்ளது.