வேடசந்தூர்: பக்ரீத் பண்டிகையையொட்டி வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் இன்று ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையாயின. குறிப்பாக செம்மறியாடுகளை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகள், நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அய்யலூர் சந்தைக்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கிச் செல்வர். கடந்த சில வாரங்களாக சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், வரும் ஜூன் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் குர்பாணி கொடுப்பது வழக்கம். இதையொட்டி, அய்யலூரில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை களைகட்டியது. திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே வியாபாரிகள் குவிந்தனர். இவர்கள் செம்மறி ஆடுகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டினர். செம்மறி ஆடுகள் தரம் மற்றும் எடைக்கேற்ப ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை விற்கப்பட்டது. நாட்டுக்கோழி ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இங்கு இன்று ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.