Wednesday, April 24, 2024
Home » ஆடு தரும் லாபம்… ஆண்டுக்கு ரூ.6 லட்சம்!

ஆடு தரும் லாபம்… ஆண்டுக்கு ரூ.6 லட்சம்!

by Porselvi

விவசாயிகளைப் பயிர்த்தொழில் சில நேரங்களில் பழி வாங்கலாம். ஆனால் அவர்களைக் கால்நடைகள் எப்போதுமே காத்து நிற்கும். கால்நடை வளர்ப்பில் ஏதாவது ஒன்றில் இழப்பு ஏற்பட்டால் கூட மற்ற ஒன்று நிச்சயம் கை கொடுக்கும். அதற்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்கிறார் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கஸ்பா, அகரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். கோழிப்பண்ணை நடத்தி வந்த இவர், அதில் திடீரென நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். அதில் இருந்து மீள நினைத்தவர் ஆட்டுப்பண்ணையைத் துவக்கி இப்போது வெற்றி நடை போடுகிறார். தனது கோழி மற்றும் ஆடு வளர்ப்பு அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “பத்து வருடத்திற்கும் மேலாக கோழிப்பண்ணை நடத்தி வந்தேன். வல்லநாடு பகுதியில் சுமார் 500 நாட்டுக் கோழிகள் வாங்கி வளர்த்தேன். 500 கோழிகள்2 வருடத்தில் 1500 கோழிகளாக பெருகின. இதில் வருடத்திற்கு 1000 கோழிகள் வரை விற்பனை செய்து வந்தேன். மீதம் இருக்கும் கோழிகளை இனப்பெருக்கத்திற்காக வைத்திருப்பேன். கோழி வளர்ப்பைப் பொருத்தவரையில் ஒரு கோழிக்கு நோய் தாக்கினால் மற்ற கோழிகளும் பாதிக்கப்படும். அப்படித்தான் அனைத்து கோழிகளும் ஒரே வாரத்தில் இறந்து போனது. மருத்துவர்களைக் கூட்டி வந்து பார்த்தும் கோழிகள் எதுவும் தப்பவில்லை. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வீட்டில் இருந்த 15 நாட்டு மாடுகளை வைத்து பால் விற்று குடும்பத்தை நடத்தி வந்தேன்.

பொருளாதார நெருக்கடியால் மிகவும் சிரமப்பட்ட நான் மீண்டும் கோழி வளர்ப்பில் இறங்கலாம் என்று முடிவு செய்தேன். இதுகுறித்து கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் கோழி வளர்ப்பை விட்டுவிட்டு சிறிது காலம் ஆடு வளர்ப்பில் ஈடுபடுங்கள் என்று அறிவுரை கூறினார்கள். அதன்படி வல்லநாடு பகுதியில் இருந்து 40 ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். இவை அனைத்துமே பொட்டு ரக ஆட்டுக்குட்டிகள். ஒரு ஜோடி கிடாய் ஆட்டினை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். 40 ஆடுகளும் மொத்தம் சேர்ந்து ரூ.2 லட்சம் வந்தது. ஆடுகளுக்கு என்று தனியாக பட்டி அமைக்காமல் கோழிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த கொட்டகையைப் பயன்படுத்திக் கொண்டேன். சிமென்ட் ஷீட் கொண்டு இரண்டு கொட்டகை அமைத்து இருக்கிறேன். ஒரு கொட்டகை 17 அடி அகலமும், 32 அடி நீளமும் கொண்டது. மற்றொரு கொட்டகை 16 அடி அகலமும், 30 அடி நீளமும் கொண்டது. இந்தக் கொட்டகை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் வரை செலவானது. தரையில் இருந்து 13 அடி உயரத்தில் கூரை அமைத்து இருக்கிறேன். இதனால் பட்டிக்குள் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இதுபோக 1200 சதுர அடி இடத்தைக் காலியாகவும் விட்டு வைத்திருக்கிறேன். இந்த இடத்தைக் காலையில் ஆடுகளை வெளியே திறந்து விடும்போது அவை சரியாக தீவனம் எடுக்கிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே வைத்திருக்கிறேன். இதில் ஏதேனும் ஆடுகள் சோர்ந்து இருந்தாலோ, தீவனம் சரியாக எடுக்காமல் இருந்தாலோ அந்த
ஆட்டினை தனிமைப்படுத்திவிடுவேன்.

காலை 10 மணி அளவில் மேய்ச்சலுக்கு ஆடுகளை திறந்துவிடுவோம். அருகில் இருக்கும் மேய்ச்சல் நிலத்தில் ஆடுகள் தேவையான தீவனத்தை எடுத்துக் கொள்ளும். மேய்ச்சல் முடிந்து மாலை 6 மணிக்கெல்லாம் ஆடுகளை அழைத்து வந்து மீண்டும் கொட்டகையில் அடைப்போம். ஆடுகளுக்கென்று மாலையில் மட்டும் அடர் தீவனம் கொடுப்போம். மக்காச்சோளம், பருத்தி, கோதுமை தவிடு, பட்டாணி தூசி, அரிசி உள்ளிட்ட வற்றை சம பங்காக எடுத்து தண்ணீரில் கலந்து கொடுப்போம். சிறிய குட்டிகளுக்கு 200 கிராம் அடர்தீவனமும், பெரிய ஆடுகளுக்கு 500 கிராம் அடர்தீவனமும் கொடுப்பேன். அதேபோல் 1 கட்டு அகத்திக் கீரையை 5 ஆடுகளுக்குக் கொடுப்போம். அகத்திக்கீரை கொடுப்பதன் மூலம் ஆடுகளின் உடல் குளிர்ச்சியாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அம்மை, வாயில் ஏற்படும் சூட்டுப்புண்கள் வராது. இதற்குப் பின்பு காலை வரை ஆடுகளுக்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம். அப்போதுதான் ஆடுகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. ஏற்கனவே கொடுத்த அடர்தீவனத்தை ஆடுகள் அசை போட்டுக்கொண்டே இருக்கும்.

நாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பிஆர்பி தடுப்பூசி போடுவோம். 100 ஆடுகளையும் மருத்துவமனைக்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு செல்வது சிரமமாக இருக்கும். இதனால் கால்நடை மருத்துவமனையில் முன்னரே தடுப்பூசி போட வேண்டும் என்று தெரிவித்து விடுவோம். மருத்துவர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். அரசு சார்பில் மருத்துவர்கள் நேரடியாக வந்து சிகிச்சை பார்ப்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆடுகள் ஊட்டமாக வளர மூன்று மாதத்திற்கு ஒருமுறை பூச்சி மருந்து கொடுப்போம். ஆட்டுப்பண்ணையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஆடுகளின் கழிவு மூலமே அவைகளுக்கு பல பிரச்னைகள் வரக்கூடும். அதனால் ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஆட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து விடுவோம். கொட்டகை நன்கு காய்ந்த பிறகு ஆட்டுப்பட்டியில் மணலைக் கொட்டி விடுவோம். இதன்மூலம் ஆடுகளுக்கு ஒவ்வாமை இருக்காது. ஆடுகளை மேய்ச்சலில் விட்டு வளர்ப்பதால் அவைகளுக்கு வயிறு உப்பசம், வயிற்றுப் போக்கு போன்ற தொந்தரவுகள் வருவது கிடையாது. ஆடுகளுக்கு சளி, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற நோய்கள் வரக்கூடும். இதனால் ஆடுகள் உயிரிழக்க நேரிடும்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆடுகளை உடனடியாக மருத்துவர்களிடம் சிகிச்சைக்குக் கொண்டு செல்வோம். ஆட்டின் உடல்நிலை சரியாகும் வரை அதனை தனி கண்காணிப்பில் வைப்போம். ஆடுகளுக்குத் தேவையான அடர்தீவனங்கள் முழுவதையும் வெளியில் இருந்துதான் வாங்குகிறோம். ரம்ஜான், பக்ரீத் காலகட்டங்கள்தான் ஆடு வளர்ப்பாளர்களுக்கு நல்ல சீசன். ஒரு சீசன் வந்துபோனதும், மீண்டும் அடுத்த சீசனுக்காக ஆடுகளை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கிவிடுவேன். அதேபோல் குட்டி ஆடுகளை ஜோடிக் கணக்கில் விற்பனைசெய்கிறேன். வருடத்திற்கு 25 லிருந்து 40 பெரிய ஆடுகள் வரை விற்பனையாகும். உயிருடன் ஒரு கிலோ ரூ.650 என ஆடுகளை விற்பனை செய்கிறோம். ஒரு ஆடு 35 லிருந்து 45 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். உத்தேசமாக ஒரு ஆடு எடையைப் பொருத்து ரூ.22 ஆயிரத்திற்கு விற்பனையாகும். வருடத்திற்கு சராசரியாக 35 ஆடுகள் விற்பனையாகும். இதன்மூலம் வருடத்திற்கு ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.1 லட்சம் தீவனத்திற்கும், ரூ.35 ஆயிரம் மருத்துவ செலவுக்கும், ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவுக்கும் போக ரூ.6லட்சத்து 25 ஆயிரம் லாபமாக கிடைக்கும்.

இதுபோக வளர்ப்பிற்காகவும் ஆடுகளை விற்பனை செய்கிறேன். வருடத்திற்கு சராசரியாக 10 ஜோடி ஆடுகளை விற்பனைக்கு வாங்கிச் செல்வார்கள். ஒரு ஜோடி குட்டி ஆட்டினை ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்கிறேன். இதன் மூலம் வருடத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. நாட்டுக்கோழி வளர்ப்பின் நஷ்டத்தில் இருந்து வெளியில் வர சிரமப்பட்ட எனக்கு பொட்டு ஆடு வளர்ப்பில் கிடைக்கும் வருமானம் மன நிறைவாக இருக்கிறது. அனைத்து வேலைகளையும் நானும் எனது மனைவி மற்றும் அப்பா மட்டுமே பார்த்துக் கொள்கிறோம். இதனால் வெளியாட்களுக்கு கூலி தரத் தேவையில்லை.  ஆடுகளை திண்டிவனம், சென்னை, விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, பொன்ன மராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால் விற்பனையும் எளிதாக இருக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
பால முருகன்: 99524 58013

 

You may also like

Leave a Comment

eighteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi