பேராவூரணி: ஆடு திருடியதை பார்த்த வாலிபரை அடித்து கொன்று எரித்த வழக்கில் 5 ஆண்டுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கடந்த 2019 ஜூலை 13ம்தேதி பாதி எரிந்த நிலையில் 30வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கிடந்தது. திருச்சிற்றம்பலம் போலீசார் நடத்திய விசாரணையில், கெலையானவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் (30) என தெரிய வந்தது.
துப்பு துலங்க முடியாமல் கிடப்பில் கிடந்த இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா(42) என்பவரை சந்தேகத்தின் பேரில் நேற்றுமுன்தினம் பிடித்து கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், கடந்த 2019 ஜூலை 8ம்தேதி மடத்திக்காடு கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவரது பட்டியில் இருந்த ஆடுகளை ராஜா திருடிய போது, ஆறுமுகம் பார்த்துள்ளார். இதை ஊரில் உள்ளவர்களிடம் கூறிவிட்டால் அவமானமாகிவிடும் என்ற பயத்தில் அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று மது விருந்து கொடுத்துள்ளார். போதை ஏறியதும் அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளார். பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் என்றனர். இதையடுத்து ராஜாவை கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.