புதுடெல்லி: கோவாவை சேர்ந்த சுரங்க அதிபர் மகன் ரோகன் டிம்ப்லோவின் ரூ.36 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. வரி குறைவாக உள்ள வௌிநாடுகளில் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ள, சொத்துகளை வாங்கி குவித்துள்ள நபர்களின் பட்டியல் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வௌியாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான பண்டோரா பேப்பர்ஸ் கசிவில் ஏராளமான இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. கோவாவை சேர்ந்த சுரங்க அதிபர் ராதா டிம்ப்லோவின் மகன் ரோகன் டிம்ப்லோவின் பெயரும் பண்டோரா பேப்பர்சில் வௌியிடப்பட்டுள்ளது.
ரோகன் டிம்ப்லோ சிங்கப்பூரில் ஆசியா சிட்டி சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் மற்றும் கொலரெஸ் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கொலரெஸ் அறக்கட்டளை, சமோவாவில் கல்ஹெட்டா ஹோல்டிங்ஸ் லிமிடெட், பிரிட்டனின் விர்ஜின் தீவுகளில் காசல் பைனான்ஸ் ஏஸ்.ஏ மற்றும் பனாமாவை தளமாக கொண்ட கோரிலஸ் அசெட்ஸ் இன்க் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனங்களின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு கொலரெஸ் அறக்கட்டளைக்கு ரூ.37,34,68,460 நிதி கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ரோகன் டிம்ப்லோவுக்கு சொந்தமான ரூ.36 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.