கோவா: கோவாவில் முதல்வராக பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில், வடக்கு கோவாவில் உள்ள பிரியோல் தொகுதி எம்எல்ஏவான 53 வயதான கோவிந்த் கவுட் கலை மற்றும் கலாச்சார துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், பழங்குடியினர் நல துறையில் உள்ள அதிகாரிகள் கோப்புகளை சரிபார்க்க லஞ்சம் வாங்குவதாக கவுட் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது பாஜவில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. கவுட்டின் இந்த குற்றச்சாட்டுகளை பயன்படுத்தி கொண்ட காங்கிரஸ், ஆளுநர் பி.எஸ்.தரன் பிள்ளையை சந்தித்து, ஊழல் நிறைந்த பாஜ அரசாங்கத்தை நீக்க கோரியது.
இந்நிலையில் நேற்று மாநில அமைச்சரவையில் இருந்து திடீரென கவுட் நீக்கப்பட்டார். கோவா பாஜ தலைவர் தாமோதர் நாயக், கவுட் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். பதவி நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. “இது மாநில அரசின் முடிவு” என்று மட்டும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கோவா புரட்சி தினத்தில் தனக்கு கிடைத்த ஒரு வெகுமதி” என்று குறிப்பிட்டுள்ளார்.