ஆன்மிகத்தின் அடிப்படையான விஷயம் நம்பிக்கை. ஆலயத்திற்குச் செல்கிறோம். தெய்வத்தை வழிபடுகின்றோம். நம்முடைய கோரிக்கைகளை வைக்கின்றோம். இத்தனையும் அந்த தெய்வம் நம் கோரிக்கையை நிறைவேற்றும் என்கின்ற நம்பிக்கையோடு செய்கின்றோம். இந்த நம்பிக்கை இல்லாமல் செய்கின்ற வழிபாடுகளோ, பூஜைகளோ, ஆலய தரிசனமோ எந்த விதத்திலும் பயன்படாது. ஆலயத்தில் சென்று இரண்டு கைகளையும் கூப்பி இறைவனை மனதார வணங்குகிறோம் என்று சொன்னால், “நம்பி + கை” கூப்புகிறோம் என்றுதான் அர்த்தம். நம்பி கை கூப்புவதுதான் நம்பிக்கை. ஆன்மிகத்தின் அடித்தளமே இந்த நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டால் அதற்குப் பிறகு பக்தி என்பது வெறும் பகட்டாகவும் வெளிவேஷமாகவும் பொய்யாகவும் போய்விடும்.
தான் கற்ற வித்தையை எல்லோரும் தெரிந்து கொண்டு உய்வடைய வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் நம்பினார். அதனால்தான் அவர் திருக்கோட்டியூரில் ‘‘ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும்” என்று பேசி வரம்பறுத்தார் (மந்திர அர்த்தத்தை எளிதாக்கிச் சொன்னார்). ஆன்மிகத்தில் மட்டுமல்ல வாழ்வியலும் நம்பிக்கை முக்கியம். நம்பிக்கை இல்லாத செயல் எடுபடாது.
மகாபாரதத்தில், ‘‘நாம் நிச்சயம் ராஜ்ஜியம் அடைவோம்’’ என்று வனவாசத்தில்யதிஷ்டிரன் சொல்லுவான். 13 ஆண்டுகள் கழித்து, ‘‘நாம் வருவோம். மீண்டும் ராஜ்ஜியம் கிடைக்கும்’’ என்று சொன்னது யதிஷ்டிரன் நம்பிக்கை. கையில்லாத எத்தனையோ பேர் வாழ்கிறார்கள். ஆனால் நம்பிக்‘‘கை” இல்லாதவர்கள் கையிருந்தும் வாழ்வது இல்லை.
மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் ஒரு சமயம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை உற்சவத்தை ஏற்பாடு செய்திருந்தார். பல இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரிசையாக நடந்து கொண்டிருந்தன மகாராஜபுரம், ஓய்வாக உட்கார்ந்து மற்ற கலைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது வெளியூர் பாடகர் ஒருவர் வந்து மகாராஜபுரத்தை வணங்கினார்.
அவரை விசாரித்த மகாராஜபுரம் ‘‘வந்தது தான் வந்தாய்! இன்று மாலை உற்சவத்தில் கொஞ்சம் பாடிவிட்டுப் போயேன்’’ என்றார். வந்த பாடகர் வினையமாக வளைந்தும் நெளிந்தும் ‘‘ம்…பெரிய பெரிய பாடகர்கள் எல்லாம் பாடுகிறார்கள். நான் பாடினால் நன்றாக இருக்குமா’’ என்றார். மகாராஜபுரம் இயற்கையிலேயே குறும்புக்காரர். அவர் சொன்னார்;
‘‘இதோ பார் உன்னைப் பாடச் சொன்னேனே நன்றாகப் பாடுவாய் என்று சொல்லவில்லை. தவிர நீயே நான் பாடினால் நன்றாகவா இருக்கும் என்கிறாய். அப்புறம் என்ன சொல்வது?’’ என்றார். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பல நல்ல வாய்ப்பை இழப்பார்கள். கழைக்கூத்தாடிகள் என்கின்ற கலைஞர்களைப் பார்த்திருப்பீர்கள். இரண்டு கம்பங்களுக்கு இடையே ஒரு கயிற்றைக் கட்டி அதிலே தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு நடப்பார்கள். அவர்கள் கலைஞர்கள். பழகியவர்கள். ஆனாலும்கூட அவர்களை அபாயகரமான கயிற்றில் நடக்க வைப்பது நம்பிக்கை. இந்தக் கயிற்றில் கீழே விழுந்து விடாமல் நடந்து அந்தப் பக்கம் சென்றுவிடலாம் என்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை என்றைக்கு அவர்கள் இழக்கிறார்களோ, அதற்கு மேல் அவர்கள் அந்த கம்பத்திலோ கயிற்றிலோ நடக்க மாட்டார்கள்.
ஒருவர் கிராமத்துச் சந்தைக்கு போய் நிறைய சாமான்களை வாங்கி, மூட்டையாகக் கட்டி தலை மேல் வைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அப்பொழுது ஒரு வண்டிக்காரன் அவரைக் கடந்து போய்க் கொண்டிருந்தான். திடீரென்று அவர் மீது இறக்கப்பட்டு வண்டியை நிறுத்தி, ‘‘இத்தனைச் சுமையோடு ஏன் நடக்கிறீர்கள்? வண்டியில் ஏறுங்கள். உங்கள் வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விடுகிறேன்’’ என்றான். இவரும் மகிழ்ச்சியோடு வண்டியில் ஏறி அமர்ந்தார். வண்டி சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஏதோ ஒரு ஞாபகமாக வண்டிக்காரன் திரும்பி பார்த்தான். பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தான். வண்டியில் சுமையோடு ஏறியவர் வண்டியின் மீது அமர்ந்து தன் தலையின் மீது அந்தச் சுமையை வைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வண்டிக்காரர் கேட்டான்;
‘‘அதுதான் ஏறி வண்டியில் அமர்ந்து விட்டீர்களே, தலைச்சுமையை இறக்கி வைக்க வேண்டியதுதானே. அதையும் தலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.’’ இதேதான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம். வாழ்வதிலே தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியம் என்று சொன்னால் ஆன்மிகத்தில் அது அதைவிட முக்கியம் நாம் கோயிலுக்கு சென்று நம்முடைய பிரச்னைகளை இறைவனிடம் போட்டுவிட்டு வருவதில்லை. அந்த பிரச்னையையும் விடாமல் கையிலே சுமந்து கொண்டுதான் வீட்டுக்கு வருகின்றோம். காரணம், நமக்கு அந்த பிரச்னையை இறைவன் தீர்த்து வைப்பாரா மாட்டாரா என்கின்ற சந்தேகம். நம்பிக்கை இன்மை.
திரௌபதி தன் மானத்தை தானே காத்துக் கொள்ள முடியும் என்று இரண்டு கைகளையும் மார்பின் குறுக்காக வைத்துக் கொண்டு முயற்சித்த போது இறைவன் வரவில்லை.
தன்னை முற்றிலுமாக இழந்து தன் இருகைகளையும் தலைமீது கூப்பி வைத்து, ‘‘இனி உன்னை விட்டால் கதி இல்லை’’ என்று முழு நம்பிக்கையுடன் அழைத்த போதுதான் அவன் அவளுக்கு அருள் செய்தான். நம்பிக்கை குறைந்த பக்திக்கு பக்தி என்று பெயர் இல்லை. அது அபக்திதான். அதாவது அது கிட்டத்தட்ட நம்பிக்கையின்மைதான்.
ஓர் ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதெல்லாம் நடனமாடுகின்றாரோ அப்போதெல்லாம் அந்த ஊரில் மழை பெய்தது. அதனால் அந்த ஊர் மக்களுக்கு, எப்போதெல்லாம் மழை தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவரிடம் சென்று நடனமாடச் சொல்வார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த துறவியரும் நடனமாடுவார், மழையும் பெய்யும். ஒருநாள் அந்த ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்கு நான்கு இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் செய்தியைக் கேள்விப்பட்டு, ஆர்வத்தோடு அந்த துறவியிடம் சென்றனர். அந்த இளைஞர்களில் ஒருவன், நீங்கள் நடனமாடினால் மழை வரும் என்றார்கள், அப்படியானால் நாங்களும் நடனமாடினால் மழை வருமா என்று கேட்டான். ஆடுங்கள் என்றார் துறவி. அந்த நால்வரும் ஒருவர் பின் ஒருவராக, எவ்வளவு நேரம் ஆடியும் மழை வரவில்லை. பின்னர் துறவியிடம், நீங்கள் ஆடுங்கள், மழை வருகிறதா பார்ப்போம் என்றார்கள் இளைஞர்கள்.
‘‘சரி, ஊர் மக்கள் வரட்டும், அவர்கள்முன் நான் நடனமாடுகிறேன்” என்றார் துறவி. ஊர் மக்களும் வந்தனர். துறவியும் ஒரு மணி நேரம் ஆடினார். மழை வரவில்லை. ஆனால், ஊர் மக்கள் மட்டும் வானத்தையும் கார்மேகத்தையுமே பார்த்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரது கைகளிலும் குடைகளும் இருந்தன. துறவியும் தொடர்ந்து ஆடினார்.
மழையும் வரத் தொடங்கியது. இளைஞர்களுக்கும் வியப்பாக இருந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தத்துடன் அங்கிருந்து சென்றனர். பின்னர், இளைஞர்கள் துறவியிடம் சென்று காரணம் கேட்டனர்.
அதற்கு துறவியார், ‘‘ஊர் மக்களிடமும் என்னிடமும் நம்பிக்கை இருந்தது, அதனால் மழை வந்தது.’’ எனவே ஒரு காரியத்தில் இறங்கும்போது, அது நிறைவேறும்வரை, முழு நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே, வாழ்வில் நாம் நினைத்தது கிடைக்கும். கோயிலுக்குச் செல்லுங்கள். நம்பிகையை இழக்காதீர்கள்.