சென்னை: பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கிய தீர்ப்பு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது என அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.
அன்புமணி (பாமக): குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளிலும் அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகச்சரியான நடவடிக்கை. இதற்கு காரணமான அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.
முத்தரசன் (இந்தியக் கம்யூனிஸ்ட்) பாலியல் வன் தாக்குதல் தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் உறுதி செய்து, குற்றங்களை நிரூபணம் செய்த காவல்துறையின் நடவடிக்கை சிறப்பானது.
சண்முகம் (மார்க்சிய கம்யூனிஸ்ட்): இந்த வழக்கை விரைவாக விசாரித்த மகளிர் நீதிமன்றம் ஒரு சில மாதங்களிலேயே குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் கல்வி வளாகங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திட வேண்டும். போதுமான சி.சி.டி.வி காமிராக்கள் மற்றும் காவலர்களை பயன்படுத்துவதுடன், வளாகத்திற்கு தொடர்பற்ற நபர்கள் உள்ளே புகாத விதத்தில் பாதுகாப்பான சூழலை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்திட அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருமாவளவன் (விசிக): இந்த தீர்ப்பு வரவேற்க்கதக்கது. பொது மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். இது போன்ற குற்றங்களை தடுக்க இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஏதுவாக அமையும்.
பிரேமலதா (தேமுதிக): அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் யாரும் இதுபோன்று தவறு செய்யாமல் இருக்க இந்த தண்டனைகள் வழிவகுக்கும்.
ஜி.கே.வாசன் (தமாகா): வருங்காலங்களில் இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இத்தீர்ப்பின் அடிப்படையில் பொது மக்களும், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருப்பதை தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது.
நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ): விரைவான விசாரணைகளும், கடுமையான தீர்ப்புகளும் மட்டுமே இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியும். உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உறுதியான நடவடிக்கை, குற்றச் செயல்களைத் தடுக்க எச்சரிக்கையாக அமைய வேண்டும்.
டிடிவி.தினகரன் (அமமுக): அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது, சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. பெண்களின் உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் உரிய மதிப்பளிக்காமல் அவர்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் குரூர மனம் படைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைவில் தண்டனை நிச்சயம் என்பதை இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
நயினார் நாகேந்திரன் : சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் என, ஆயுள் தண்டனை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோல் பல்வேறு பாலியல் குற்ற வழக்குகளில் கைதாகி இருக்கும் நபர்களின் மீது விரைந்து விசாரணை நடத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் கூட்டணி குறித்து த.வெ.க. கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.