Wednesday, June 25, 2025
Home மகளிர்அழகு பளபளப்பான சருமமும் உணவுகளும்!

பளபளப்பான சருமமும் உணவுகளும்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

நம் உடல் எடையில் ஏழில் ஒரு பங்கு சருமம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலின் சூப்பர் ஹீரோவும் இதுதான். வெயில், குளிர், மழை என அனைத்து சீதோஷ்ண நிலையில் இருந்தும் நம்மை காத்து வருகிறது. சருமத்தை பாதுகாக்க நாம் மாய்சரைசர் கிரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்பாடு என்பது பொதுவான நடைமுறைகள் என்றாலும், ஆரோக்கியமான உணவினை நாம் உட்கொள்வதன் மூலம் சருமம் என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். எந்த உணவு நம் சருமத்திற்கு சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். செலினியம், துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமம் வறண்டு போகாமல் காக்கும்.

சூரியகாந்தி: ஆரோக்கியமான பளபளப்பான சருமத்திற்கான உணவைப் பற்றி விவாதிப்பதில், சூரியகாந்தி விதைகளை விலக்க முடியாது. இந்த விதைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், செலினியம், துத்தநாகம் மற்றும் புரதம் ஆகியவற்றின் கலவை உள்ளது. இவை சருமத்தின் கொலாஜன் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த சரும பாதுகாப்பிற்கு ஆதரவாக அமையும்.

அக்ரூட் பருப்புகள்: வால்நட்ஸ் சருமத்திற்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். ஒமேகா-3 உள்ளிட்ட அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக இருப்பதால், அவை சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன. ஒரு அவுன்ஸ் அக்ரூட் பருப்புகளில் 8% துத்தநாகத்தின் மதிப்பு அடங்கிஉள்ளது. இது சருமத்தில் ஏற்படும் காயத்தினை குணப்படுத்த உதவுகிறது. அக்ரூட் பருப்புகளில் துத்தநாகம் மட்டுமில்லாமல், வைட்டமின் ஈ மற்றும் செலினியம் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை சருமத்தை ஊட்டமளிக்க உதவி செய்யும்.

கொழுப்பு நிறைந்த மீன்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக இருப்பதால், இந்த மீன்கள் தோலின் தடிமன், நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்தை பராமரிக்கும். ஒமேகா-3 UV கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஈ சத்து அதிகமாக இருப்பதால், சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தினை கட்டுப்படுத்தும். கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் துத்தநாகம், சருமம் ஆரோக்கியமாகவும் புதிய சருமச் செல்கள் உருவாக உதவி செய்யும். தோல் ஆரோக்கியம் மற்றும் புதிய தோல் செல்களின் தொகுப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

இனிப்பு உருளைக்கிழங்கு: பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு இனிப்பு உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 100 கிராம் வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்துடன் ஒருங்கிணைத்து, சூரிய ஒளி பாதிக்காமல் இருக்க ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி சருமத்தின் அணுக்கள் மற்றும் வறண்டு போகாமல் தடுக்கும்,

மிளகுத்தூள்: பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு சிறந்த உணவு. வைட்டமின் சி இருப்பதால் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் உறுதியுடனும், வலிமையாக இருக்க உதவுகிறது.

பட்டர் ஃப்ரூட்: இதில் உள்ள கொழுப்பு சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும். இதில் சூரியனின் தாக்கத்தினை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. சருமம் சுறுக்கம் அடையாமலும் புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்தும் பாதுகாக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் ஈ மற்றும் சி, சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன. வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.

ப்ரோக்கோலி: பளபளப்பான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ப்ரோக்கோலியினை சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்கும்.

சோயா: ஈஸ்ட்ரோஜனை கட்டுப்படுத்தும் சோயா, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும், நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கவும் உதவுகின்றன. மெனோபாஸ் காலத்தில் சருமத்தில் வறட்சியினை போக்கி கொலாஜன் அதிகரிக்க உதவும். ஐசோஃப்ளேவோன்கள் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து உடம்பில் உள்ள அணுக்கள் மற்றும் சருமம் இரண்டையும் பாதுகாக்கும்.

தக்காளி: தக்காளியில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் லுடீன் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் லைகோபீன் மூன்றும் சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பினை தடுக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்துக் கொள்ள உதவும். கிரீன் டீ: இதில் நிறைந்துள்ள கேடசின் பளபளப்பான சருமத்திற்கு உகந்தது. சருமத்தின் ஈரப்பதம், தடிமன் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும்.

டார்க் சாக்லேட்: கோகோ ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். சருமத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, பளபளப்பினை தக்க வைக்க உதவும்.

தர்பூசணி: தர்பூசணியில் 90% நீர்சத்து நிறைந்துள்ளதால் சருமத்தை ஈரப்பதத்துடன் இருக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயதான தோற்றத்தினை நீக்கும். அமினோ அமிலம் சரும செல்களை ஊட்டமளிக்க செய்யும்.

தொகுப்பு: பிரியா மோகன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi