ஜகர்தா: உலக அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கிய பங்காற்றி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் பெருந்திரளாக திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டது மிகுந்த பெருமையை தருவதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆசியான் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. ஆசியான் தொடர்பான கூட்டங்களில் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது என்று கூறினார். மேலும், நமது வரலாறும், புவியியலும் இந்தியாவையும், ஆசியானையும் இணைப்பதாக தெரிவித்த பிரதமர், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை நம்மை ஒருங்கிணைப்பதாக குறிப்பிட்டார்.
ஆசியா நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் Act East Policyயின் மைய தூண் ஆசியான் கூட்டமைப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த கூட்டாண்மை 4வது தசாப்தத்தை எட்டியுள்ளதாக தெரிவித்ததுடன் ஆசியான் உச்சி மாநாட்டிற்கு இணை தலைமை தாங்குவது தனக்கு கிடைத்த பெருமை என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் இதை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபரை வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஆசியான் மாநாட்டு நிகழ்வுகளுக்குப் பின் இன்று மாலையே பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.