சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நான் முதல்வன் திட்டத்தின் தமிழ்நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த திறமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தின் கீழ் தென்கொரியா நாட்டின் பல்கலைக் கழகங்களில் உலகளாவிய செயல்முறை பயிற்சி பெற்று வந்த 6 மாணவ, மாணவிகள் சந்தித்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் தமிழ்நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த திறமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தின் கீழ் தென்கொரியா நாட்டின் பல்கலைக் கழகங்களில் உலகளாவிய செயல்முறை பயிற்சி பெற்று வந்த 6 மாணவ, மாணவிகள் சந்தித்து, தாங்கள் பெற்ற பயிற்சி குறித்து கலந்துரையாடினார்கள்.
முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயின்ற அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். உயர்கல்வி பயின்ற மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறவும், திறன்மிக்க மாணவர்களாக உருவாக்கவும் உலகளாவிய செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்க தமிழ்நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த திறமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தினை (Scholarships for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) செயல்படுத்தி வருகின்றார்.
நான் முதல்வன் திட்டத்தின் தமிழ்நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த திறமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தின் கீழ், பயோமெடிக்கல் மற்றும் நானோ பொருட்களின் ஆற்றல் பயன்பாடுகள், சூரிய மின்கல தொழில்நுட்பம் மற்றும் நிலையான ஆற்றல் கண்டுபிடிப்புகள் தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சி பயிற்சிக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அவர்கள் கல்லூரி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், நடத்தப்பட்ட நேர்காணல் மூலம் 6 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அரசு செலவில் தென் கொரியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்று வரும் 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கு தென்கொரியா நாட்டின் கச்சோன் பல்கலைக் கழகத்தின் பயோ – நானோ பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தில், இந்த மாதம் 9 தேதி முதல் 24 – தேதி வரை நானோ பொருட்களின் தொகுப்பு மற்றும் பண்புகளில் ஈடுபடும் நானோ பொருட்களின் உயிரி மருத்துவம் மற்றும் ஆற்றல் பயன்பாடுகள் தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சி முறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், இயற்பியல் துறையைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தென்கொரியா நாட்டின் பூசன் தேசிய பல்கலைக் கழகத்தில் இந்த மாதம் 9 தேதி முதல் 24 தேதி வரை மேம்பட்ட நிலையான எரிசக்தி ஆய்வகத்தில் (ASEL) சூரிய மின்கல தொழில்நுட்பம் மற்றும் நிலையான எரிசக்தி கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிகளின் காரணமாக பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் தென்கொரியா நாட்டின் கச்சோன் மற்றும் பூசன் பல்கலைக்கழகங்கள் அல்லது தென்கொரியா நாட்டின் பிற பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர வாய்ப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய துணை முதலமைச்சர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும், பயிற்சி பெற்றது குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தபோது தென்கொரிய பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பும் அளித்தனர், இந்த வாய்ப்பினை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு மாணவ, மாணவிகள் நன்றி என்று தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்,இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி,இ.ஆ.ப., உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.