Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது: ராகுல்காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில்தான் டெல்லியில் மதுபான ஊழல் நடந்தது என்று ராகுல்காந்தி கூறினார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வீதிவீதியாக பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடி, ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஆகியோரை கடுமையாகி தாக்கி பேசினார்.

தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தூய்மையான அரசியலை கொண்டு வர வேண்டும் என்று பேசினார். ஆனால் அவரது ஆட்சியில்தான் டெல்லியில் மிகப்பெரிய மது ஊழல் நடந்தது. ஏழைபங்காளன் என்று கூறிய அவர்தான் கண்ணாடி மாளிகையில் வசித்து வந்தார். கெஜ்ரிவால் மட்டுமல்ல, முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவும்தான் மதுபான ஊழலின் சிற்பி. டெல்லியில் ஏழைகளுக்கு மிகவும் தேவைப்படும்போது கெஜ்ரிவாலை எங்கும் காணவில்லை. 2020ல் டெல்லியில் கலவரம் நடந்த போது அவர் எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் மக்களுடன் காங்கிரஸ் துணையாக நின்றது.

பிரதமர் மோடி கையால் ராமர் கோவில் திறக்கப்பட்டபோதுதான் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று பாஜ தலைவர்கள் கூறுகிறார்கள். ராமர் கோவில் திறப்பு விழாவில், ஒரு ஏழையை கூட காணவில்லை. பழங்குடியினத்தை சேர்ந்த எங்கள் ஜனாதிபதியையும் அங்கு அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற திறப்பு விழாவிலும் அவர் அழைக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ. ஆகியவை சகோதரர்கள், பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களை ஒருவரையொருவர் சண்டையிட வைக்கிறது. நமது நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லை.

டெல்லியில் சுவாசிக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் மோடியின் முகம், அம்பானி திருமணம், அதானியின் விமான நிலையங்களைக் காட்டுகின்றன. அரசியல் சாசனம், சமத்துவம் பற்றி பேசும் போது கோடீஸ்வரர்களால் நடத்தப்படும் இந்தியாவை பாஜ விரும்புகிறது.சாமானியர்களின் கையிலிருந்து பணத்தை எடுத்து கோடீஸ்வரர்களிடம் கொடுப்பதே பா.ஜவின் நோக்கமாகும். அதானி, மோடியின் நண்பர். அதானியின் நிறுவனத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள், அதன் கட்டுப்பாடு மோடியின் கையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* பிரதமர் மோடியை பார்த்து கெஜ்ரிவால் பயப்படுகிறார்

ராகுல்காந்தி பேசுகையில், ‘நாட்டில் உள்ள மற்ற கட்சிகள், மோடிக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ தெரியவில்லை, ஆனால் கெஜ்ரிவால் அவருக்கு பயப்படுகிறார்’ என்றார்.

* தனக்கு தானே நேர்மையாளன் சான்றிதழ் யார் கொடுப்பார்?

டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி நேர்மையற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருடன் ராகுல்காந்தி படத்தையும் இணைத்து இருந்தது. இதற்கு பதிலடியாக ராகுல்காந்தி பேசுகையில்,’கெஜ்ரிவால் தனக்கு தானே நேர்மைக்கான சான்றிதழைத் தருகிறார். தனக்கென நேர்மை சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? நேர்மையற்றவன் தான் அவ்வாறு செய்கிறான். நேர்மையானவன் தனக்கு தானே சான்றிதழ் தருவதில்லை. நேர்மையானவனுக்கு மக்கள் சான்றிதழைத் தருகிறார்கள். எனவே நேர்மையாளன் சான்றிதழை கெஜ்ரிவால் தனக்கு தானே கொடுக்காமல் மக்களிடம் கேட்க வேண்டும்’ என்றார்.