சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, மக்கள் மீது சொத்து வரியை ஏற்றி சிரமத்திற்கு உள்ளாக்குவது நியாயமில்லை. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது. சொத்து வரி உயர்வால் பல பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஒட்டுமொத்த சீரமைப்பு என்ற பெயரில், புதிய விகிதங்களை நிர்ணயிப்பதால் வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறிவிட்டு, மக்கள் மீது பொருளாதார சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது முறையற்றது. எனவே தமிழக அரசு, இனிமேல் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் .இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.