திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்திக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. இது எனது ஆசை மட்டுமல்ல எங்க கட்சியில் இருக்க கூடிய ஒவ்வொரு பொறுப்பாளர்கள். தொண்டர்களுடைய விருப்பமும் இது தான். பாமக பிரச்னை சம்பந்தமாக அன்புமணியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். நான் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். பரவாயில்லை போனிலே சொல்லுங்கள் என்று அவர் கூறினார். கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகளை நான் வெளியே சொல்லக்கூடாது.
பொருளாளர் திலகபாமா பற்றி நான் எந்த குறையும் சொல்லவில்லை. அவர்களை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என்று சொல்லி ராமதாசிடம் சண்டை போட்டேன். இந்த தகவலை நான் செய்தியாளர்களிடம் கூறினேன் என்று தெரிந்தால் என்னை ராமதாஸ் திட்டுவார். எந்த பொறுப்பாளரையும் மாற்ற வேண்டாம் தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள் அவசரப்படாதீர்கள் என்று கூறினேன். ஆனால் அவர் மனஉளைச்சலை வேதனைகளை என்னிடம் கொட்டுகிறார். நான் இரண்டு முடிவு எடுத்திருக்கிறேன். யாருக்கும் தெரியாமல் எங்கேயாவது ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது.
எங்க கட்சிக்கார்கள், குடும்பத்தினர் யார் கண்ணிலும் படாமல் ஓடிவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்க கூடாது. இந்த இரண்டு தான் என் முடிவு. கட்சியின் நிலமை கஷ்டமாக இருக்கிறது. கட்சியில் நடக்க கூடிய சம்பவங்கள் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.