பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (32) என்பவரிடம் கடந்த 2021ம் ஆண்டு 40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதன்பின்னர் அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். இந்தநிலையில், கடனை அடைப்பதற்காக அந்த பெண், தனது 16 வயது மகளை வேலைக்காக முத்துலட்சுமியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது. இதன்பிறகு வீட்டுவேலை செய்துவந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து அதன்மூலம் முத்துலட்சுமி பணம் சம்பாதித்து உள்ளார்.இந்த நிலையில், சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முத்துலட்சுமியிடம் சண்டை போட்டுக்கொண்டு தனது தாயிடம் வந்துவிட்டார். இதன்பிறகு மீண்டும் முத்துலட்சுமி வீட்டுக்கு வேலைக்கு செல்லும்படி மகளை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் வீட்டைவிட்டு சென்ற சிறுமி கடந்த 8மாதமாக மணலி புதுநகரில் தனது தம்பியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் தனது மகளை தொடர்புகொண்டு முத்துலட்சுமி வீட்டுக்கு வேலைக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதுசம்பந்தமாக எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரில், ‘’என்னை எனது தாய் வலுக்கட்டாயமாக முத்துலட்சுமி என்பவரிடம் ஒப்படைத்தார். இதன்பிறகு முத்துலட்சுமி, அவருடன் இருந்தவர்கள் ஆகியோர் தனக்கு போதை பொருட்களை கொடுத்து பலரிடம் உடலுறவில் ஈடுபட வைத்தனர். இதன்காரணமாக உடல்நிலை மோசம் அடைந்தது. இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின்படி, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து சிறுமியின் தாய் மற்றும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முத்துலட்சுமி, அவரது கணவர் நிஷாந்த் உள்ளிட்ட 5 பேரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் ஒருவரும் சம்பந்தப்பட்டு உள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.