பெண்களுக்குப் பல அற்புத பலன்களை அள்ளித் தரும் முருங்கை இலைப் பொடியின் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.ஒரு பெண்ணின் உடல் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. பருவமடைவது முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை ஒரு பெண்ணின் உடலில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனுடன் எலும்பு மெலிதல் நோய், கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல்வேறு பிரச்னைகளையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படக்கூடிய இந்த பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது முருங்கைக் கீரை.
முருங்கைக் கீரையின் ஊட்டச்சத்து விவரங்கள்:
தயிரை விட 2 மடங்கு புரதச்சத்து, கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் A, வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம், பசும் பாலை விட 4 மடங்கு கால்சியம், ஆரஞ்சுப் பழத்தை விட 7 மடங்கு வைட்டமின் C.
பெண்கள் ஏன் முருங்கை இலைப் பொடியை சாப்பிட வேண்டும்?
பெண்களுக்கு முருங்கை இலைப் பொடி தரும் ஆரோக்கிய நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான சூர்யா மாணிக்கவேல் பகிர்ந்து உள்ளார்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
இயற்கையாகவே புரதம், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், வைட்டமின் C, B, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், தாதுக்களும் முருங்கைக் கீரையில் நிறைந்துள்ளன.
நீர்த் தேக்கத்தை குறைக்கும்
முருங்கை இலைப் பொடி நீர் தேக்கத்தை குறைக்கும். மேலும் இதில் உள்ள டையூரிடிக் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன. இவை அனைத்தும் எடை இழப்புக்கு வழி வகுக்கின்றன.
முடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது.
முருங்கை இலை பொடியில் வைட்டமின் E, B, A மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு நல்லது
நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய காரணியான இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க முருங்கை இலை பொடியை எடுத்துக் கொள்ளலாம். இது நீர் கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக நன்மைகளைத் தரும்.
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்கும்
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைப் போக்க முருங்கை இலைப் பொடி பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் A, C போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும். வெப்பத்தை குறைக்கவும் உதவுகின்றன.
மாதவிடாய் வலியை போக்கும்.
பல பெண்களும் மாதவிடாய் நாட்களில் தசை பிடித்து பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட முருங்கை இலை பொடியை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் உடலை வலுப்படுத்தவும் உதவுகிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது
கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் சிறந்த ஆதாரமான முருங்கைக்கீரை இலையை சாப்பிடுவதன் மூலம் எலும்பு மெலிதல் நோயின் அபாயத்தை குறைக்கலாம்.
மனச்சோர்வைப் போக்கும்.
முருங்கை இலைப் பொடி மனநிலையை மேம்படுத்தி மன சோர்வில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம், வைட்டமின், A, B,C, E போன்ற ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மனநிலையை பராமரிக்க உதவுகின்றன.முருங்கை இலைப் பொடியை வெந்நீரில், நீங்கள் சமைக்கும் காய்கறியில் அல்லது குழம்புடன் கலந்து சாப்பிடலாம்.
–
கவிதாபாலாஜி கணேஷ்