தேன்கனிக்கோட்டை: காதலியுடன் வாலிபர் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த பள்ளி மாணவன் காரில் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கொலையாளிகளை கைது செய்யக்கோரி, சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40), சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் ரோகித் (13), மாவனட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை, பள்ளி அருகே ரோகித் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், அவரை காரில் கடத்தி சென்றனர். ரோகித் கடத்தப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் மாவனட்டி கிராம மக்கள், நேற்று முன்தினம் இரவு போலீசில் புகார் அளித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருந்தது. ஆனால், சிறுவனை கண்டுபிடிக்கவில்லை. நேற்று முன்தினமே புகார் அளித்தும், சிறுவனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, பெற்றோர் மற்றும் கிராம மக்கள், நேற்று மதியம் அஞ்செட்டி பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் அஞ்செட்டி போலீசார், விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், அஞ்செட்டி கொண்டை ஊசி வளைவு பகுதியில், வனப்பகுதியில் சிறுவன் ரோகித் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. உடனடியாக அஞ்செட்டி போலீசார் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் சிறுவன் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டும், காலில் கத்தியால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரது சடலத்தை அஞ்செட்டி பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததால், சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான். அவனை கடத்தி கொலை செய்த வாலிபர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி, சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி தங்கதுரை, சம்பவ இடம் சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நேற்று முன்தினமே புகார் அளித்தும், சிறுவனை கண்டுபிடிக்காத அஞ்செட்டி இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், சிறுவனை கடத்தி கொலை செய்த வாலிபர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
பின்னர், எஸ்பியின் சமரசத்தை ஏற்று மறியலை கைவிட்டனர். தொடர்ந்து, ரோகித்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் (25) என்ற வாலிபர், ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை, சிறுவன் ரோகித் நேரில் பார்த்து விட்டான். இதனால், வீட்டில் கூறி விடுவான் என பயந்து போன மாதேவன், கர்நாடகாவை சேர்ந்த தனது நண்பரான மாதேவா (21) என்பவருடன் சேர்ந்து, சிறுவன் ரோகித்தை காரில் கடத்தி சென்று, கொடூரமாக கொலை செய்து, உடலை வனப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக, சிறுவன் கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சிறுவனை கடத்திச் சென்ற மாதேவன், மாதேவா ஆகியோரை பிடித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.