தென்காசி: கடையநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய இன்ஸ்டாகிராம் காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் கிணற்றில் கடந்த 10ம் தேதி சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண் யார்? அவரை கொன்று வீசியது யார்? என விசாரணை நடத்தினர். பெண்ணின் முகம் முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், கையில் பச்சை குத்தப்பட்டிருந்த எம்.வி என்ற எழுத்தை அடையாளமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் காணாமல்போன இளம்பெண் குறித்து விசாரித்தனர்.
இதில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை காவல்நிலையத்தில் வினோதினி என்பவர் மாயமானதாக புகார் பதிவாகி இருந்தது. இதையடுத்து அம்மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு காணாமல் போன இளம்பெண்ணின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரித்தனர். இதில் மீட்கப்பட்ட இளம்பெண் பிணம், வினோதினிதான் என்பது உறுதி செய்யப்பட்டது. வினோதினியின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரித்தபோது, வலசையை சேர்ந்த மனோரஞ்சித் என்ற வாலிபர் பேசியது தெரிய வந்தது.
அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மனோரஞ்சித், வினோதினியை கொலை செய்தது தெரிந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: எனக்கும், வினோதினிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நான், அவரை தீவிரமாக காதலித்து வந்தேன். ஆனால் வினோதினி, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் என்னுடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். வினோதினி அவ்வப்போது என்னை சந்திப்பதற்காக வலசை வந்து செல்வார்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் வினோதினிக்கு மேலும் சில இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் கேட்கவே, “என் மீது நம்பிக்கை இல்லையா?, நான் அப்படி எல்லாம் கிடையாது, உனக்கு நான் உண்மையாக உள்ளேன்’ என்று கூறி சமாதானம் செய்தார். கடந்த 7ம் தேதி வினோதினியை ஊருக்கு அழைத்தேன். அவரும் வந்தார். வலசை காட்டுப்பகுதியில் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது வினோதினி, “என்னை நம்பவில்லை என்றால் நீயே என்னை கொன்றுவிடு’ என எதார்த்தமாக கூறினார்.
ஆத்திரத்தில் இருந்த நான், அருகே இருந்த கட்டையை எடுத்து வினோதினியின் தலையில் பலமாக தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். இதனால் நண்பர்களான மகாபிரபு, பரத், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை செல்போனில் அழைத்து அனைவரும் சேர்ந்து சாக்குப்பையில் வினோதினி உடலை கட்டி கிணற்றில் வீசினோம். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மனோரஞ்சித் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர்கள் என 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.