செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர் பகுதிக்கு உட்பட்ட கே.கே.நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் அஜய் (எ) சிவப்பிரகாசம் (25). இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியை சேர்ந்த பெண் ஆகிய இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில், நாளடைவில் அஜய் ஒரு ரவுடி என்பது அந்த பெண்ணிற்கு தெரியவந்தது. அது குறித்து அந்த பெண்ணின் தாய்மாமாவும் அவரது அக்கா மகளிடம் அஜய் குறித்து தெளிவாக எடுத்துக்கூறியதால், அந்த பெண் முழுமையாக அஜய்யை மறந்து அவருடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.
தனது காதலி தன்னுடன் பேசுவதை தவிர்த்து முற்றிலுமாக மாறியதற்கு தனது காதலியின் தாய்மாமாதான் காரணம் என ஆத்திரமடைந்த அஜய் அவரது நண்பர் கருப்பு (எ) யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து திம்மாவரத்தில் உள்ள தனது காதலியின் தாய்மாமன் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் நேரில் சென்றுள்ளார்.என்னுடைய காதலியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டாய் என கூறி அவரை ஒருமையில் பேசியதோடு கத்தியை காட்டிமிரட்டி இனியும் எனது காதலி என்னோடு பேசவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.இதுகுறித்து அஜய்யின் காதலியின் மாமா செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அஜய் மற்றும் யுவன்ஷங்கர்ராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.