தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (29), ராயபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22ம் தேதி எஸ்.என்.செட்டி சாலையில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்தார். அப்போது, பைக்கில் வந்த ஒரு ஜோடி, சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்றபோது, எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க திரும்ப முயன்றதால், திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதை பார்த்த போலீஸ்காரர் ஹரிஹரசுதன் அங்கு சென்று, கீழே விழுந்தவர்களை தூக்கிவிட்டு உதவி செய்தார். அப்போது, போதையில் இருந்த வாலிபர், போலீஸ்காரரின் ரிப்லெக்ட் ஜாக்கெட்டை பிடித்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபருடன் வந்த 19 வயது இளம்பெண்ணை, காசிமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் காசிமேடு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். அதில், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்பட 6 வழக்குகளில் தொடர்புடைய தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார் (20) என்பதும், போதையில் பைக்கை ஓட்டி வந்து போலீஸ்காரை பார்த்து தப்பி ஓடியவர் என்று தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.