சென்னை: தாயுடன் பள்ளிக்குச் சென்றபோது ஸ்கூட்டர் தடுமாறியதில் தவறி விழுந்த மாணவி தண்ணீர் லாரியில் சிக்கி தலைநசுங்கி பலியானார். சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு சாய்ராம் சாலை மூன்றாவது தெருவை சேர்ந்தவர் யாமினி. இவரது கணவர் செந்தில்நாதன் இறந்து விட்டார். இவர்களது மகன் அரவிந்த். மகள் சவுமியா (10). மகன் அரவிந்த் யாமினியின் தாய் வீட்டில் வளர்ந்து வருகிறார். யாமினி தனது மகள் சவுமியாவுடன் தனியாக வசித்து வருகிறார். யாமினி தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சவுமியா 5ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் யாமினி தனது மகளை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று பள்ளிக்கு விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி நேற்று காலை 7.45 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு 8.15 மணியளவில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு வாக்கின்ஸ் தெரு சந்திப்பு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
யாமினி ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த சவுமியா ஹெல்மெட் அணியாமல் இருந்தார்.
அப்போது சாலையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில் ஸ்கூட்டர் ஏறி இறங்கியதால் தடுமாறி உள்ளது. யாமினி கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறமாக கீழே விழுந்தார். அவரது வாகனமும் இடதுபுறமாக விழுந்தது. ஆனால் பின்னால் அமர்ந்திருந்த மாணவி சவுமியா நிலைதடுமாறி வலதுபுறமாக சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியின் பின் சக்கரம் சவுமியா மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
அடுத்தடுத்த வினாடிகளில் திடீரென இந்த சம்பவம் நடந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், மங்களம் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (41) என்பவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். மேலும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.