சென்னை: “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற அண்ணாவின் வாக்கின்படி, கலைஞர் வழியில், தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக ‘இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம்’ நடத்தலாம் என திட்டமிட்டோம்.
முதல் கூட்டத்தை கடந்த 19ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தினோம். அங்கு கூடிய இளைஞர்களின் எழுச்சிதான் அனைத்து மாவட்டங்களிலும் ‘செயல்வீரர்கள்’ கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்குத் தந்தது. தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கூட்டம் நடைபெறவுள்ளது. சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை – காரைக்கால் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடக்கும். நான் வரும்போது பட்டாசு வெடிப்பதையும், பொன்னாடை, பூங்கொத்து கொடுப்பதையும் தவிர்க்குமாறு பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
அதற்கு பதிலாக புத்தகங்கள், திமுக வேட்டி-துண்டுகள் போன்றவற்றை தாருங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மாநில மாநாட்டுக்கு, இளைஞர் அணிக்கு வளர்ச்சி நிதியை தரலாம். இந்த பயணத்தில், மகிழ்ச்சிக் கடலில் திளைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டு முதல்வரின் திராவிட மாடல் அரசுக்கு நன்றி சொன்ன ஏழை எளிய மக்கள், கோரிக்கை மனுக்களைக் கையில் சுமந்தபடி காத்திருந்த பெண்கள் எனக் கலவையான முகங்கள் என் கண்முன் வந்து போகின்றன.
லட்சக்கணக்கான திமுக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும். அவர்களுக்குப் பயன்படும்படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது. “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற அண்ணாவின் வாக்கின்படி, முத்தமிழறிஞர் வழியில், தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.