பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் அல்கான் தெருவில் வசித்து வருபவர் அமர்நாத் (45). அமைந்தகரையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா கடந்த 10 ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரித்திஷா (18) தனது பெரியம்மா புஷ்பா என்பவர் வீட்டில் வசித்து வருகிறார்.2வது மகள் நந்தினி (16) தந்தை அமர்நாத்துடன் வசித்து வந்தார். இந்த சிறுமி மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அமர்நாத் கடந்த 2015ம் ஆண்டு உஷா (40) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். மாற்றுத்திறனாளியான உஷா சிறுமி நந்தினியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாதபோது மாடி கூரை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்நிலையில் சிறுமி தற்கொலைக்கு அவரது சித்தி தான் காரணம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.இதில் வீட்டில் சமைப்பது துணி துவைப்பது பெருக்குவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்ய வைத்து சிறுமியை சித்தி உஷா கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
வேலை செய்யவில்லை என்றால் உஷா அடித்து சித்திரவதை செய்ததும் தெரியவந்தது. இவை அனைத்தும் தெரிந்தும் அமர்நாத் மனைவியிடம் எந்த கேள்வியும் கேட்காமல் இருந்து வந்துள்ளார். மாதவிடாய் நேரங்களில் பயன்படுத்தும் துணிகளைகூட சிறுமியை துவைக்க சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமி பலமுறை பள்ளி தோழிகளிடம் கூறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் உஷாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் மனமுடைந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து உஷா அமர்நாத் (45) ஆகியோரை கைது செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.