ஆற்காடு: ஆற்காட்டில் மின்கம்பத்தில் கார் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் உஷா(55). இவர் நேற்றிரவு ரோந்து பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை ராணிப்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றார். காரை கலவை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் ஓட்டினார்.
அதிகாலை 4 மணியளவில் ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் எதிரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உஷா படுகாயமடைந்தார். டிரைவர் காயமின்றி தப்பினார். மேலும் மின்கம்பம் உடைந்து சாய்ந்தது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உஷாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.