காரமடை: கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், துடியலூர் வெள்ளக்கிணறு அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சஞ்சீவ் (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பைக் மெக்கானிக்கான சஞ்சீவ், சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் அவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை சஞ்சீவ் கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தோலம்பாளையம் பகுதியில் இருந்த சிறுமியையும், பைக் மெக்கானிக் சஞ்சீவையும் நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் பைக் மெக்கானிக் சஞ்சீவ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.