*திருச்சியில் ருசிகர சம்பவம்
திருச்சி : 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க கோரி திருச்சியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (22). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் மணிகண்டம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து தினேஷ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் போக்சோ வழக்கில் தண்டனை முடிந்து மணிகண்டன் விடுதலையானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதே பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு தற்போது 17 வயதே ஆவதால் திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தினேஷ் நாகமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே பயன்பாட்டில் இல்லாத தனியார் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து தினேஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் முதல்கட்டமாக டவரை சுற்றிலும் வலைகளை கட்டினர். பின்னர் மணிகண்டம் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தினேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தால்தான் இறங்குவேன், இல்லாவிட்டால் குதித்து விடுவேன் என்று கூறி அடம் பிடித்தார். 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின் போலீசார் அந்த பெண்ணையே திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து 4 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. இதன்பின் போலீசார் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி மீது தாக்குதல்
தினேஷ் சிறையிலிருந்து வெளியே வந்தபின் அந்த சிறுமிக்கு 18 வயதானதும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டிலும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்திற்கு தினேஷ் வந்தார். அங்கு சிறுமியும் வந்துள்ளார். அங்கு இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ் அந்த சிறுமியை தாக்கியதால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி சிறுமி அங்கிருந்து சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.