பர்மிங்காம்: இந்தியா- இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பர்மிங்காம் நகரில் துவங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. நேற்று 2வது நாள் ஆட்டத்தை கில் 114 ரன், ஜடேஜா 41 ரன்னுடன் துவக்கினர். ஜடேஜா 89 ரன் எடுத்து டங்க் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன், பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய கில் இரட்டை சதம் (311 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்ஸ்) அடித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 42 ரன்னில் ரூட் பந்து வீச்ச்சில் போல்ட் ஆனார்.
டீ பிரேக் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் எடுத்தது. கில் 265 ரன்னுடனும், ஆகாஷ் தீப் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து விளையாடிய இந்திய 587 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இது முதல் இரட்டை சதமாகும். SENA என அழைக்கப்படும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இரட்டை சதமடித்த ஆசிய நாட்டை சேர்ந்த வீரர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் SENA நாட்டில் இந்திய கேப்டனாக முகமது அசாருதீன் நியூசிலாந்துக்கு எதிராக 192 ரன் எடுத்திருந்தார். நேற்று இரட்டை சதமடித்து அதையும் முறியடித்தார் கில்.
* மாநில அளவிலான கால்பந்து
மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி சென்னை சேத்துபட்டில் நேற்று தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து தஞ்சாவூர் அரசு மேனிலைப்பள்ளி உட்பட 12 முன்னணி பள்ளிகள் பங்கேற்று உள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முடிகின்றன. நாக் அவுட் மற்றும் இறுதி ஆட்டம் நாளை நடைபெறும். முன்னதாக நேற்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் திருவள்ளூர் வேலம்மாள் பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி எல்கே பள்ளியை வீழ்த்தியது.
* சங்கர் முத்துசாமி முன்னேற்றம்
கனடாவின் மர்க்கம் நகரில் நடைபெறும் கனடா ஓபன பேட்மின்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதிலொரு ஆட்டத்தில் இந்திய வீரர்களான சங்கர் முத்துசாமி, யுஎஸ் ஓபன் சாம்பியன் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் மோதினர். அதில் சங்கர் 23-21, 21-12 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்கள் நடந்தது. மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரியன்ஷு ராஜ்வத், கிடம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் களம் கண்டனர். அதில் ஸ்ரீகாந்த் 18-21, 21-19, 21-14 என்ற செட்களில் 53 நிமிடங்கள் போராடி வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீயன்ஷி வலிசெட்டி 40 நிமிடங்களில் 21-18, 22-20 என நேர் செட்களில் உக்ரைன் வீராங்கனை போலினா புரோவாவை வென்றார். மற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் முதல் சுற்றுடன் தோற்று வெளியேறினர்.