‘‘மிரட்டி, உருட்டி மலராத கட்சி கூட்டணிக்கு பணிய வைத்தாலும் இலைக்கட்சியுடனான உடன்பாடு நீரு பூத்த நெருப்பாகவே இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘ஆமா.. என்ன தான் சேலம்காரரை மிரட்டி, உருட்டி இலை கட்சியுடன் கூட்டணிக்கு மலராத கட்சி பணிய வைத்தாலும் இலை கட்சியினர் மத்தியில் கூட்டணி உடன்பாடு நீரு பூத்த நெருப்பாகவே அல்வா, முத்து உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருக்கு.. ஏற்கனவே மலராத கட்சி கூட்டணி பிரிந்த பிறகு சந்தோஷத்தில் இருந்த இலை கட்சி தொண்டர்கள் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட பிறகு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மவுனம் சாதிச்சிட்டு வர்றாங்க..
மலராத தேசிய கட்சியின் மலையான தலைவரால்தான் குடைச்சல் என்பதால் தலைவரை மாற்றினால் கூட்டணிக்கு சம்மதம் என பச்சைக்கொடியை காட்டிவிட்டார் சேலம்காரர். ஆனால் கூட்டணி சேர்ந்த பிறகு தற்போது தேசிய கட்சியின் உ‘ஷா’ரானவர் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சிதான் அமையும் என உதார் விடுகிறாராம்.. மலராத கட்சியின் மாநில தலைவரான அல்வா மாவட்டத்துக்காரர் கூட்டணி தொடர்பாக என்ன தான் பூசி மெழுகினாலும், மலராத கட்சியின் மற்ற தலைவர்கள் அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டனராம்..
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்களே என இலை கட்சியினர் மத்தியில் அச்சம் குடி கொண்டிருக்காம்.. மகாராஷ்டிரா பாணியில், கட்சியை உடைத்து விட்டால் என்ன செய்வது என்பதுதான் இலை கட்சியினரின் கவலையாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொத்து ஆய்வுக்கு வந்த குழுவிடம் நகர நிர்வாகிகள் மீது புகார் பட்டியல் அளித்தது கையில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் மாவட்டத்தில் வனமான பகுதி இருக்கு.. இங்கு கைக்கு ஆதரவு கணிசமாக இருக்கிறதாம்.. சமீபத்தில் அங்கு வந்த மாஜி கை தலைவர் தலைமையிலான குழுவினர் கட்சி சொத்துகளை நேரடி களஆய்வு மேற்கொண்டாங்களாம்.. அப்போது மாவட்டம், நகரத்தை கவனிக்கும் தலைகள் மீது புகார் குவிந்ததாம்.. கமிட்டிக்கு சொந்தமாக 69 கடைகள் இருக்க, மாத வருமானமாக பல்லாயிரம் கிடைக்க வரிகூட செலுத்தாததை சுட்டிக் காட்டினார்களாம்..
கட்சியை வளர்த்த தலைவர்களை போற்றும் விழா நாட்களில்கூட பழைய பேனர்களில் தேதியை மட்டும் மாற்றியும், மாநில தலைவரின் புகைப்படத்தைகூட ஒட்டி பயன்படுத்தும் அவலம் பற்றி குமுறினார்களாம்.. மாவட்டம், நகரத்தின் மீதான அதிருப்திகளை ஆய்வுக்கு வந்த குழுவிடம் கட்சியினர் கொட்டியுள்ள நிலையில் இப்பட்டியல் டெல்லியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதிமொழி கிடைச்சிருக்காம்.. இதனால் புரத்தில் கை கழுவல் நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால் கையில் சலசலப்பு ஏற்பட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மகன் திருமணத்துக்காக கல்லா கட்ட நினைத்து ஒரு தொகை வசூல் செய்யணும் நெருக்கடி கொடுக்கிறாராமே சித்த மருத்துவ பிரிவு மாநில பெண் ஆணையர்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சித்த மருத்துவ பிரிவு மாநில உச்ச அதிகாரியாக இருப்பவர் லட்சுமிகரமான பெண் அதிகாரி. இவரது மகன் திருமணம் வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடக்கிறதாம்… இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர், மருந்தாளுனர்களுக்கு அழைப்பிதழை அனுப்பி வைத்திருக்கிறாராம்.. அதில் ‘அன்பளிப்பு தவிர்க்கப்படும்’ என குறிப்பிட்டுள்ள பெண் அதிகாரியின் செயல்பாடு நேர் எதிர்மாறாக உள்ளதாம்..
அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தொகை கண்டிப்பாக வழங்க வேண்டும்னு நெருக்குதல் கொடுக்கிறாராம்.. கிரிவலம் மாவட்டத்தில் 60க்கும் அதிகமான சித்த பிரிவு மையம் உள்ளதாம்.. ஒரு மையத்திற்கு 1500 வீதம் முடிவு செய்து இந்த தொகையை வசூல் செய்யும் பணியை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சித்த மருத்துவர் ஈடுபட்டு வருகிறாராம்.. இதற்கான தனி கூட்டம் கடந்த வாரம் கூட்டப்பட்டு அதில் அறிவுறுத்தப்பட்டதாம்.. பக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1500 நிர்ணயம் செய்து இதற்கான தொகையை வசூல் செய்து தயார் நிலையில் வைத்துவிட்டனராம்..
சித்த மருத்துவ பிரிவில் வெளிவருமானம் ஏதும் இல்லாத நிலையில் தனது சொந்த சம்பள ஊதிய தொகையைத்தான் அதிகாரியின் மகன் திருமணத்திற்கு வழங்க வேண்டும் என்கிற குரல் கிரிவலம் மாவட்டம் முழுவதும் எதிரொலிக்கிறதாம்.. இதே உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ளதாகவும் சொல்லப்படுது.. அழைப்பிதழில் அன்பளிப்பு தவிர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ள பெண் அதிகாரி மாநிலம் முழுவதும் கல்லாக்கட்ட நினைக்க துடிப்பது எந்த விதத்தில் நியாயம் என சித்த மருத்துவ பிரிவு அலுவலர்களின் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூவத்தூரில் இருந்து வெளியே ஓடி வந்ததால் தங்கத்தில் ெஜாலிக்க முடியாமல் போன இலைக்கட்சி நிர்வாகி அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எப்படியும் கைப்பற்றிவிடலாம் என இலைக்கட்சியின் மூத்த உறுப்பினரான சிவந்தமலை ரொம்பவே ஆர்வமா இருந்தாராம்.. இதற்காக இலைக்கட்சி தலைவர் ஊருக்கு வரும்போதெல்லாம் ஓடிவந்து முன்வரிசையில் நிற்பதுடன், அவரது கண் அசைவை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாராம்.. ஆனால் இலைக்கட்சி தலைவர் தேர்தலில் அவரது பெயரை அறிவிக்காமல் ஏமாற்றிவிட்டாராம்..
இதனால சிவந்தமலைக்காரர் வீட்டிலேயே முடங்கிட்டாராம்.. என்றாலும் அவரது அடிபொடிகள் ராசியில்லாதவர் என அவரை சொல்றாங்களாம்.. மந்திரி, எம்.பி., எம்எல்ஏ என அனைத்து பதவிகளையும் அனுபவித்திருந்தாலும் இனிமேல் போட்டியிட்டு பதவியை பிடிக்கப்போவதில்லை எனவும், தனது பணியை பாராட்டி பதவிகளை வழங்க வேண்டும் எனவும் சொல்லிக்கிட்டே இருப்பாராம்.. கூவத்தூரில் சின்னமம்மி தலைமையில் ஒன்றாக கூடியிருந்த நேரத்தில் அங்கிருந்த எல்லோருக்கும் ரொக்கமும், கோல்டும் கொட்டிக் கொடுத்தாங்களாம்..
அந்நேரத்தில் இப்போது இலைக்கட்சி தலைவராக இருக்க கூடியவரது தலைமையில் நான் இயங்க மாட்டேன் என கூறியதுடன், அணை தொகுதி மக்களிடம் கருத்தை கேட்டுக்கிட்டு வருகிறேன் என கூவத்தூரில் இருந்து வெளியே ஓடிவந்துட்டார். அப்படியே தேனிக்காரர் கூட்டத்தோடு கலந்துட்டார்.. ஆனால் இலைக்கட்சி சேலத்து தலைவரும், தேனிக்காரரும் ஒன்று சேர்ந்து நாலரை ஆண்டு ஆட்சியை நடத்திட்டாங்க.. இதனால முழுமையாக பாதிக்கப்பட்டது சிவந்தமலைக்காரர் தானாம்..
கொஞ்சம் அவசரப்படாமல் கூவத்தூரிலேயே இருந்திருந்தால் தங்கத்தில் ஜொலித்திருக்கலாமாம்.. அதன்பிறகு இலைக்கட்சி தலைவருடன் ஒன்றிணைந்து பதவியை எதிர்பார்த்து காத்திருந்தால் இலைக்கட்சி தலைவர் கொடுத்துவிடுவாரா என்ன என அவரது அடிபொடிகள் கேள்வி கேட்டிருக்காங்க.. என்றாலும் எனது உழைப்புக்கு அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் இருக்காராம் அந்த சிவந்தமலைக்காரர்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.