அருமனை : பத்துகாணி சந்திப்பில் குடிநீர் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த ராட்சத ஏணி திடீரென சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பத்துகாணி சந்திப்பில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பாதையில் ஊர்மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள கொண்ட பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தண்ணீர் தொட்டியின் மேலே செல்ல சுமார் 100 கிலோ எடையுள்ள பெரிய இரும்பு ஏணி உள்ளது.
மருத்துவமனை செல்லும் பாதை என்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். கடையல் பஞ்சாயத்து சார்பில் நிறுவப்பட்ட இந்த தண்ணீர் தொட்டியில் இணைக்கப்பட்ட இரும்பு ஏணியின் கீழே சிமெண்ட் கலவையால் எந்த அடித்தளமும் அமைக்காமல் மண்ணிலேயே நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஏணியின் பக்கவாட்டிலும் எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாமல் தொட்டியின் மேலே மாட்டி விட்டுள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்த இரும்பு ஏணி நேற்று முன்தினம் திடீரென ஆட்டம் கண்டது.கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரமாக சென்ற மின்கம்பிகள் மீது விழுந்து அதில் தொங்கியவாறு சாலையின் குறுக்கே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சாலையில் அப்போது பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.
மின்கம்பிகளும் அறுந்து விழவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அதேபோல் ஆபத்தாக இருந்த இரும்பு ஏணி மீது ஊழியர்கள் யாரும் ஏறிச்செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால் விபரீதம் நடந்திருக்கும்.
எனவே இந்த ஏணியை முறையாக குடிநீர் தொட்டியில் அமைப்பதோடு, சுற்றுவட்டார பகுதியில் இதேபோல் உள்ள தண்ணீர் தொட்டிகளின் தரத்தையும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்ன சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்கம்பி மீது இரும்பு ஏணி உரசியதால் மின்தடை ஏற்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டது. மேலும் மின் கம்பிகளை இணைக்கும் இன்சுலேட்டர்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் இதை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.