Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குட்டிகளுடன் 12 அடி நீள ராட்சத முதலை உலா

*கிராம மக்கள் பீதி

தாராபுரம் : தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் 12 அடி நீளம் ராட்சத முதலை குட்டிகளுடன் உலா வந்ததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தாராபுரம், மூலனூர், சின்னதாராபுரம் வழியாக கரூர் காவிரியில் சங்கமம் ஆகிறது.

கடந்த 2001ம் ஆண்டு அமராவதி அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, அணைப்பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த முதலை பண்ணையில் இருந்தும், அணையில் இருந்தும் ஏராளமான முதலைகள் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டது. இதில், ஆற்றின் வழியில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே முதலைகள் கரைஒதுங்கி விட்டன.

இதில், கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக அமராவதி கரையோரம் உலா வரும் முதலைகள், அலங்கியம், சீதக்காடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதில் 2 முதலைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் வனத்துறையினர் 10 நாட்கள் போராடி பிடித்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை 12 அடி நீளமுள்ள முதலை 6 குட்டிகளுடன் அலங்கியம் அமராவதி பாலத்தின் அருகே கரையோரம் உள்ள பாறை மீது ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

இதை அந்த வழியாக சென்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் பார்த்து பீதியுடன் ஓடி வந்துவிட்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமராவதி ஆறு முழுவதும் ஆங்காங்கே கரை ஒதுங்கி அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலைகள் அனைத்தையும் வனத்துறையினர் பிடித்துச் செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.