நம் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். ஆனால் அது எது என்பதை கண்டுபிடித்து மெருகேற்றுவதில்தான் நாம் கவனம் செலுத்துவதில்லை. பொதுவாக வாழ்க்கைப் பாதையில் நாம் கடந்து செல்லும்போது மாற்றுத்திறனாளிகள் சிலரைச் சற்று ஆழ்ந்து கவனித்தால் அற்புதமான திறமைகள் அவர்களிடம் ஒளிந்திருப்பதைக் காணமுடியும். அப்படி ஒரு அபூர்வ மனிதர்தான் நிக் வ்யூஜிக். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வ்யூஜிக் பிறக்கும்போதே இரண்டு கைகளும், கால்களும் இல்லை. இடது கால் மட்டும் மிகச் சிறிய அளவில் துருத்திக்கொண்டு இருந்தது.மகனின் நிலையை நினைத்து தாய் துஸிகாவும் அவரது கணவரும் வருந்தினார்களே தவிர,மனம் தளரவில்லை.தன் மகனை வளர்ப்பதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டார்கள்.
மூன்று வயதிலேயே அவனை ஸ்கேட்டிங் போர்டில் வைத்து நகரப் பழக்கினர். தனது துடுப்பு போன்ற சிறிய இடது காலை வைத்து ஸ்கேட்டிங் போர்டில் பயணித்தார் நிக். தானியங்கி சக்கர நாற்காலியை இயக்கவும் கற்றுக் கொண்டார். நிக் வளர வளர, தனக்கு மற்றவர்களுக்கு இருப்பது போல் ஏன் கை,கால்கள் இல்லை என்பதை நினைத்து வருந்தினார். அந்த வருத்தமே நாளடைவில் தன் குறைபாட்டை எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்கிற தன்னம்பிக்கை, வெறியாக மாறியது. இயல்பான குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே அவர்களுக்கு இணையாகப் படித்தார். சக்கர நாற்காலியில் நிக் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவர அவர் பள்ளி நாட்களிலேயே பிரபலமானார். 1990ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் இளம் குடி மகனுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. குவிந்த நன்கொடைகளை வைத்து அவருக்குப் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டபோது, நிக் அதனை மறுத்தார். நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்றார் தன்னம்பிக்கையுடன். தன் உடல் குறைபாட்டையும் தனது அடையாளமாகக் கருதினார் நிக். அது மிகப்பெரும் மனோபாவம். நிக் இயல்பான மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் தானே செய்யக் கற்றுக்கொண்டார்.
தினசரிக் கடமைகளான குளிப்பது,உடையணிவது,உண்பது போன்ற அனைத்து வேலைகளையும் தானே செய்து கொண்டார். புகைப்படம் எடுப்பது, நீச்சலடிப்பது, நீர்ச் சறுக்கு,கால்பந்து, ஹாக்கி விளையாடுவது என்று தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் செய்தார்.
தரையிலும், தண்ணீரிலும் விளையாடியது போதாதென்று நினைத்த நிக், வானமே தனது எல்லை என்ற முடிவுக்கு வந்தார். அடுத்து வானிலிருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
2005 ஆம் ஆண்டு சர்வதேசத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பல சமூகச் சேவைகளையும் செய்ய தொடங்கினார். படிப்பிலும் நிக் பளீர் ரகம். ஆஸ்திரேலியாவின் கிரிபித் பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் இளங்கலைப் பட்டமும், கணக்கியல் மற்றும் நிதி திட்டமிடல் துறையில் இரண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார்.
தனது 17 வயதில் இருந்தே தன்னம்பிக்கை உரைகளை மேடைகளில் முழங்கத் தொடங்கினார். 2007ம் ஆண்டு Attitude is Attitude என்ற பெயரில் சுய முன்னேற்ற வழிகாட்டுதலுக்கான நிறுவனத்தைத் தொடங்கி,இதன் மூலம் இதுவரை 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்னம்பிக்கை உரையாற்றியுள்ளார். சோர்ந்து போன மனங்களைப் புத்துணர்வு கொள்ள வைக்கும் அவரது பேச்சுகளால் உலகம் எங்கும் பலரும் உந்துசக்தி பெற்றனர்.
அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பும், தனது உடல் குறைபாட்டினை எதிர்கொண்டு அவர் வென்ற கதையை நகைச்சுவையோடு சொல்லும்போது பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். மேடையில் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இயல்பாகப் பேசுவார். நகைச்சுவையாய்ப் பேசிக்கொண்டே இருப்பவர் திடீரென்று குரலைத் தாழ்த்தி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசும்போது, அதுவரை சிரித்த பார்வையாளர்கள் கண்கலங்கும் காட்சி நிக் உரையின் தனி முத்திரை.
நிக்குக்குக் குடும்பம் உண்டு.மனைவியின் பெயர் கெனே மியாஹரா. நான்கு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது, கைகள் இல்லாத இவர் தன் மனைவிக்கு மோதிரம் அணிவித்த சம்பவம் சுவாரஸ்யமானது. திருமணத்தின் போது அவரது கைகளில் முத்தமிட விரும்புவதாக நிக் கூற,கெனே மியாஹரா கைகளை நீட்டினார். முத்தம் கொடுப்பதற்காகத் தன் வாயை அவரது கையருகே கொண்டு சென்ற நிக்,யாரும் எதிர்பாராத நேரத்தில் தன் வாயில் வைத்திருந்த மோதிரத்தை கெனே மியாஹரா விரல்களில் மாட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
நிக் ஏராளமான தன்னம்பிக்கை புத்தகங்களையும் எழுதி உள்ளார்.கை மற்றும் கால் இல்லாதபோது தன் தன்னம்பிக்கையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிக்கின் சாதனை மகத்தானது. இவரைப்போல வேறு யாருக்காவது நடந்திருந்தால் நினைத்துப் பாருங்கள். மூலையிலே முடங்கிப் போய் இருப்பார்கள். சாதாரண சிறிய கஷ்டம்,தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு, போன்ற சாதாரண விஷயங்களுக்கெல்லாம் எதிர்மறை எண்ணத்தோடு தவறான முடிவுக்குச் செல்லக்கூடிய மாணவர்களுக்கு நிக்கின் வாழ்க்கை ஒர் உன்னதப்பாடமாகும். வெட்கம், தயக்கம்,அச்சம் போன்ற தாழ்வுமனப்பான்மையால் எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொள்ளாமல் இருந்தால் உங்கள் திறமைகள் இந்த உலகத்திற்குத் தெரியாமலே போய்விடும். நிக்கைப் போல தயக்கங்களை உதறி திறமையை வெளிப்படுத்த தயாராகுங்கள். வெற்றியை வசப்படுத்துங்கள்.
வெட்கம்,தயக்கம்,அச்சம் போன்ற தாழ்வுமனப்பான்மையால் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தால் உங்கள் திறமைகள் இந்த உலகத்திற்கு தெரியாமலே போய்விடும்.
பேராசிரியர், அ.முகமது அப்துல்காதர்